Published : 30 Oct 2020 09:43 PM
Last Updated : 30 Oct 2020 09:43 PM

கரோனா எதிரொலி; யோகா, ஆயுர்வேதம் மீது உலகம் முழுவதும் ஆர்வம்

எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க யோகா, ஆயுர்வேதா மற்றும் இயற்கை வைத்தியத்தில் உலகளாவிய ஆர்வத்தை கோவிட் ஏற்படுத்தியுள்ளது.

எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் யோகா, ஆயுர்வேதா மற்றும் இயற்கை வைத்தியம் ஆகியவற்றின் மீது உலகளாவிய ஆர்வத்தை கோவிட் ஏற்படுத்தியுள்ளதாக மத்திய பணியாளர் துறை இணை அமைச்சர் ஜித்தேந்திர சிங் கூறியுள்ளார்.

உலகளாவிய ஆயுஷ் மேளா என்ற காணொலி காட்சி நிகழ்ச்சிக்கு இந்திய வர்த்தக சபை அசோசெம் ஏற்பாடு செய்திருந்தது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு துவக்க உரையாற்றிய மத்திய இணை அமைச்சர் டாக்டர் ஜித்தேந்திர சிங் கூறியதாவது:

மாற்று மருத்துவ முறைகளை ஆராய்வதற்காக, மேற்கத்திய உலகம் கடந்த 4-5 மாதங்களாக இந்தியா பக்கம் திரும்பியுள்ளது. புதிய இந்தியா, சுகாதாரத்துறையிலும் தற்சார்பு இந்தியாவாக மாறும். பாரம்பரிய மருந்துகள் வாயிலாக, எதிர்ப்பு சக்தி ஊக்குவிப்பு முறைகளை உலகத்துக்கு இந்தியா வழங்கும். ஒருங்கிணைந்த மருத்துவத்தின் நற்குணங்களை கொவிட் வலியுறுத்தியுள்ளது. இந்த ஒருங்கிணைந்த மருத்துவத்தை, உலக சுகாதார நிறுவனம் உட்பட உலகளாவிய மருத்துவ முறைகளில் ஒரு பகுதியாக மாற்ற வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.

இந்தியாவின் பிரதமராக நரேந்திர மோடி அவர்கள் பொறுப்பேற்றது முதல், மருத்துவ நிர்வாகத்தில் சுதேச முறையின் நன்மைகளை மைய நிலைக்குக் கொண்டு வந்தார். ஐ.நா சபையால், சர்வதேச யோகா தினம் கடைபிடிக்கும் வகையிலான ஒருமித்த தீர்மானத்தை திரு.மோடி கொண்டுவந்ததன் பலனாக, உலகம் முழுவதும் உள்ள ஒவ்வொரு வீட்டையும் யோகா சென்றடைந்தது. மீண்டும் திரு.நரேந்திர மோடி, சுதேசிய மருத்துவ மேலாண்மை முறையின் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு ஆயுஷுக்கு தனி அமைச்சகத்தை உருவாக்கினார்.

இமயமலை, இந்தியாவின் மலைப்பாங்கான மற்றும் வடகிழக்கு மாநிலங்கள் மருத்துவ குணமுள்ள மூலிகைகள் மற்றும் தாவரங்கள் மிக அதிகமாக நிறைந்த களஞ்சியமாக இருக்கின்றன. அனைத்து பங்குதாரர்களும் அதனை உபயோகித்து, சர்வதேச அளவுக்கு முன்னெடுக்க வேண்டும்.

இவ்வாறு மத்திய இணை அமைச்சர் டாக்டர் ஜித்தேந்திர சிங் கூறி உள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x