

2021-22ம் ஆண்டு முதல் 2025-2026-ம் நிதி ஆண்டுகளுக்கான அறிக்கை குறித்த ஆலோசனைகளை என்.கே. சிங் தலைமையிலான 15-வது நிதி ஆணையம் இன்று நிறைவு செய்தது.
இந்த அறிக்கையில் என்.கே.சிங் மற்றும் ஆணையத்தின் உறுப்பினர்கள் அஜய் நாராயணன் ஜா, பேராசிரியர் அனூப் சிங், அசோக் லகிரி மற்றும் ரமேஷ் சந்த் ஆகியோர் கையெழுத்திட்டனர்.
இந்த அறிக்கையை குடியரசுத் தலைவரிடம் தாக்கல் செய்ய நிதி ஆணையம் கால அவகாசம் கேட்டிருந்தது. இதையடுத்து, இந்த அறிக்கை 2020 நவம்பர் 9-ம் தேதி தாக்கல் செய்யப்படும் என குடியரசுத் தலைவர் அலுவலகம் தெரிவித்துள்ளது.அறிக்கையின் நகலை பிரதமரிடம், நிதி ஆணையம் அடுத்த மாத இறுதியில் வழங்கும்.
இந்த அறிக்கை, மத்திய அரசின் செயல் நடவடிக்கை அறிக்கையுடன் நாடாளுமன்றத்தில் மத்திய நிதியமைச்சரால் தாக்கல் செய்யப்படும். இந்த அறிக்கையில் 2021-22 முதல் 2025-26ம் ஆண்டு வரை 5 நிதியாண்டுகளுக்கான பரிந்துரைகள் இடம் பெற்றிருக்கும். 2020-21ம் ஆண்டுக்கான 15வது நிதி ஆணைய அறிக்கை, குடியரசுத் தலைவரிடம் கடந்த 2019ம் ஆண்டு டிசம்பர் மாதம் அளிக்கப்பட்டது. அதன்பின் இது நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
15வது நிதி ஆணையத்தை, அரசியல் சாசன சட்டத்தின் 280வது பிரிவுப்படி குடியரசுத் தலைவர் அமைத்தார். இந்த குழு மாநில அரசுகள், உள்ளாட்சி நிர்வாகங்கள், முன்னாள் நிதி ஆணைய உறுப்பினர்கள் உட்பட பல தரப்பினருடன் விரிவாக ஆலோசித்து தனது அறிக்கையை இறுதி செய்துள்ளது.