

2021 முதல் 2026-ம் ஆண்டு வரையிலான 5 நிதி ஆண்டுகளுக்கான பரிந்துரைகள் மற்றும் இறுதி அறிக்கையை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்திடம் 15-வது நிதி ஆணையம் நவம்பர் 9-ம் தேதி தாக்கல் செய்ய உள்ளது.
15-வது நிதி ஆணையம் கடந்த 2017-ம் ஆண்டு அமைக்கப்பட்டது. இதன் தலைவராக ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரியும், பொருளாதார வல்லுநரும், பாஜகவைச் சேர்ந்தவருமான நந்த் கிஷோர் சிங் நியமிக்கப்பட்டார். இந்த ஆணையத்தின் முழு நேர உறுப்பினர்களாக அஜய் நாராயண் ஜா, அனூப் சிங், அசோக் லாஹிரி, ரமேஷ் சாந்த் ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.
இந்த 15-வது நிதி ஆணையம் 2021 முதல் 2026-ம் நிதியாண்டுக்கான வரிமுறை மாற்றங்கள், வரிப் பகிர்வு, நிதி விவகாரங்கள் உள்ளிட்டவை குறித்து ஆய்வு செய்து பரிந்துரைகள் வழங்க அமைக்கப்பட்டது.
இந்த நிதி ஆணையத்துக்கு ஏற்கெனவே ஒரு முறை நீட்டிப்பு வழங்கப்பட்டிருந்தது. இந்நிலையில் நிதி ஆணையம் தனது இறுதி அறிக்கையை, பரிந்துரைகளைத் தயார் செய்துள்ளது. இந்த இறுதி அறிக்கையை வரும் நவம்பரில் குடியரசுத் தலைவரிடம் நிதி ஆணையம் ஒப்படைக்க இருக்கிறது.
இதுகுறித்து 15-வது நிதி ஆணையம் இன்று வெளியிட்ட அறிவிப்பில், “15-வது நிதி ஆணையம் தனது இறுதி அறிக்கையைத் தாக்கல் செய்ய குடியரசுத் தலைவரிடம் கால அவகாசம் கேட்டிருந்தது.
அதன்படி 15-வது நிதி ஆணையத்தின் இறுதி அறிக்கை அனைத்தும் நவம்பர் 9-ம் தேதி குடியரசுத் தலைவரிடம் ஒப்படைக்கப்படும். இது தொடர்பாக குடியரசுத் தலைவர் மாளிகை அலுவலகத்துக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. குடியரசுத் தலைவரிடம் தாக்கல் செய்தபின் மற்றொரு நகல், பிரதமரிடமும் வழங்கப்படும்.
மத்திய அரசு, மாநில அரசுகள், பல்வேறு மட்டங்களில் உள்ள உள்ளாட்சி நிர்வாகங்கள், முன்னாள் நிதி ஆணையத்தின் தலைவர், உறுப்பினர்கள், ஆலோசகர்கள், வல்லுநர்கள், பல்துறை வல்லுநர்கள் ஆகியோருடன் ஆலோசனை நடத்தி இறுதி அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டது.
இந்த அறிக்கையில் 2021-22 முதல் 2025-26 ஆம் நிதி ஆண்டு வரையிலான பரிந்துரைகள் அடங்கியிருக்கும். இந்த அறிக்கையை நிதியமைச்சர் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்து ஒப்புதல் பெற்றபின் நடைமுறைக்கு வரும்.