Last Updated : 30 Oct, 2020 03:30 PM

 

Published : 30 Oct 2020 03:30 PM
Last Updated : 30 Oct 2020 03:30 PM

தேர்தல் பிரச்சாரத்தில் சர்ச்சைக்குரிய வார்த்தைகளைப் பயன்படுத்தாதீர்: பாஜக தலைவர் விஜய் வர்கியாவுக்கு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தல்

பாஜக மூத்தத் தலைவர் விஜய் வர்கியா: கோப்புப் படம்.

புதுடெல்லி

தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும்போது, தேர்தல் பிரச்சாரத்தில் பொதுமக்கள் முன்னிலையில் சர்ச்சைக்குரிய வார்த்தைகளைப் பயன்படுத்தாதீர்கள் என பாஜக தலைவர் விஜய் வர்கியாவுக்கு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

மத்தியப் பிரதேசத்தில் 28 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் நவம்பர் 3-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான தேர்தல் பிரச்சாரத்தில் பாஜக, காங்கிரஸ் தலைவர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த 14-ம் தேதி இந்தூர் மாவட்டம், சான்வர் நகரில் பாஜக மூத்த தலைவர் விஜய் வர்கியா தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தார்.

அப்போது, காங்கிரஸ் மூத்த தலைவர்கள் கமல் நாத், திக்விஜய் சிங் இருவரையும் துரோகிகள் உள்ளிட்ட அவதூறான வார்த்தைகளாலும், சர்ச்சைக்குரிய சொற்களாலும் விஜய் வர்கியா விமர்சித்துள்ளார்.

இதுகுறித்து காங்கிரஸ் கட்சி சார்பில் விஜய் வர்கியா மீது தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்தப் புகாரை ஆய்வு செய்த தேர்தல் ஆணையம் 26-ம் தேதிக்குள் பதில் அளிக்க விஜய் வர்கியாவுக்கு நோட்டீஸ் அனுப்பி இருந்தது.

விஜய் வர்கியாவும், தேர்தல் ஆணையத்தின் நோட்டீஸுக்கு விளக்கம் அளித்திருந்தார். அதில், “ நான் பேசிய பேச்சின் முழுமையான அர்த்தத்தைப் புரிந்துகொள்ளாமல் சில குறிப்பிட்ட பகுதிகளை மட்டும் சிலர் அளித்துள்ளார்கள். நான் சர்ச்சைக்குரிய வகையில் பேசவில்லை.

இருப்பினும் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மதிக்கிறேன். பாஜகவின் ஒவ்வொரு தொண்டரும் தேர்தல் விதிமுறைகளை மதிக்கிறார்கள். தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டல்படி நடக்கக் கடமைப்பட்டுள்ளேன்’’ என்று தெரிவித்திருந்தார்.

இதையடுத்து, தேர்தல் ஆணையம் இன்று வெளியிட்ட அறிவிப்பில், “பாஜக தலைவர் விஜய் வர்கியாவின் கருத்துகளையும், பேச்சுகளையும் தீவிரமாக ஆய்வு செய்தோம். அதில் அரசியல் கட்சி, வேட்பாளர்களுக்கான தேர்தல் நடத்தை விதிமுறைகள் பிரிவு(2)ன் கீழ் அவர் விதிமுறையை மீறியுள்ளது தெரியவந்தது.

முதல் தவறு என்பதால், விஜய் வர்கியா பொதுமக்கள் மத்தியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடும்போதும், தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும்போதும், சர்ச்சைக்குரிய வகையில் பேசுவதைத் தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்” எனத் தெரிவிக்கப்பட்டது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x