

2017-ம் ஆண்டு கபில் மிஸ்ரா மீது ஆம் ஆத்மி கட்சியின் டெல்லி சுகாதார அமைச்சர் சத்யேந்திர ஜெயின் அவதூறு வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கில் கபில் மிஸ்ரா தான் தவறிழைத்ததாக ஒப்புக் கொண்டு மன்னிப்பு கேட்டதையடுத்து புகாரை சத்யேந்திர ஜெயின் வாபஸ் பெற்றதையடுத்து வழக்கு முடித்து வைக்கப்பட்டது.
அதாவது சத்யேந்திர ஜெயின் டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு லஞ்சம் கொடுத்ததாக ஒரு குண்டைத்தூக்கி கபில் மிஷ்ரா போட்டார். இதனையடுத்து கபில் மிஸ்ரா மீது அவதூறு வழக்குத் தொடரப்பட்டது.
இந்த வழக்கில் மிஸ்ராவுக்கு அழைப்பாணை விடுக்கப்பட்டு அவர் மீது அவதூறு வழக்கு பதிவானது.
இந்நிலையில் எம்.பி./எம்.எல்.ஏ.க்களுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் தனது கூற்று அரசியல் ஆதாயத்துக்காக மேற்கொள்ளப்பட்டதாகவும் தவறானது என்றும் கபில் மிஸ்ரா ஒப்புக் கொண்டார்.
“நான் நிபந்தனையற்ற மன்னிப்புக் கேட்கிறேன், இந்தத் தவறை மீண்டும் செய்ய மாட்டேன். இதை நான் என் சமூக ஊடகத்திலும் வெளியிட்டு மன்னிப்பு கேட்கிறேன்” என்றார்.
விசாரணையில் லஞ்சம் கொடுத்ததான தனது குற்றச்சாட்டுக்கு கபில் மிஸ்ரா எந்த ஒரு ஆதாரத்தையும் காட்ட முடியவில்லை. அவர் லஞ்சம் கொடுத்ததாக எழுப்பிய தினத்தில் முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் இல்லத்தில் கபில் மிஸ்ரா இல்லை என்பது தெள்ளத்தெளிவானது.
இதனையடுத்து மிஸ்ரா மன்னிப்புக் கேட்டார், இதனையடுத்து சத்யேந்திர ஜெயின் கூறும்போது, “இந்தக் குற்றச்சாட்டு எந்த அடிப்படையும் ஆதாரமும் அற்றது என்ற நிஜம் அம்பலத்துக்கு வந்தது. அவர் அரசியல் உள்நோக்கத்துடன் தான் இந்தக் குற்றச்சாட்டை வைத்தார் என்பது தெளிவாகிறது” என்று கூறினார்.