பிரதமர் மோடி இரண்டு நாள் பயணமாக குஜராத் வருகை: முதல்வர், ஆளுநர் வரவேற்பு

இன்று குஜராத்துக்கு வருகை தந்துள்ள பிரதமர் மோடி | படம்: ஏஎன்ஐ.
இன்று குஜராத்துக்கு வருகை தந்துள்ள பிரதமர் மோடி | படம்: ஏஎன்ஐ.
Updated on
1 min read

பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் பயணமாக இன்று காலை குஜராத்துக்கு வருகை தந்துள்ளார். குஜராத் முதல்வரும், ஆளுநரும் அவரை வரவேற்றனர்.

குஜராத்தில் பல்வேறு நலத்திட்டங்களைத் தொடங்கி வைப்பதற்காக பிரதமர் மோடி குஜராத்துக்கு வருகை தந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இன்று காலை அகமதாபாத் விமான நிலையத்திற்கு வந்த பிரதமர் மோடியை, முதல்வர் விஜய் ரூபானி, ஆளுநர் ஆச்சார்யா தேவ்ரத் ஆகியோர் வரவேற்றனர்.

நாட்டில் கரோனா வைரஸ் தாக்கங்களுக்குப் பிறகு பிரதமர் தனது சொந்த மாநிலத்திற்கு வருகை தரும் முதல் பயணம் இதுவாகும்.

பிரதமரின் குஜராத் பயணம் குறித்து அதிகாரிகள் கூறியதாவது:

''வியாழக்கிழமை காலமான குஜராத் முன்னாள் முதல்வரும், பாஜகவின் தலைவருமான கேசுபாய் படேலுக்கு அஞ்சலி செலுத்தவும் அவரது குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல் அளிக்கவும் மோடி விமான நிலையத்திலிருந்து காந்தி நகருக்குப் புறப்படுவார்.

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட குஜராத்தி சினிமா சூப்பர் ஸ்டார் நரேஷ் கனோடியா சமீபத்தில் உயிரிழந்தார். இந்நிலையில் நரேஷ் கனோடியாவின் குடும்ப உறுப்பினர்களையும் அவரது சகோதரர் மகேஷ் கனோடியாவையும் சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நரேஷ் கனோடியா மற்றும் மகேஷ் கனோடியா ஆகியோர் பாஜகவுடன் தொடர்புடையவர்கள் மற்றும் முறையே எம்.எல்.ஏ மற்றும் எம்.பி.யாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் ஆவர்.

காந்தி நகரின் புறநகரில் வசிக்கும் அவரது தாயார் ஹிராபாவை பிரதமர் மோடி சந்திப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

அதன் பின்னர், சர்தார் படேலுக்கு அர்ப்பணிக்கப்பட்ட நினைவுச்சின்னமான ஒற்றுமை சிலைக்கு அருகில் பல்வேறு சுற்றுலாத் திட்டங்களைத் திறக்க பிரதமர் நர்மதா மாவட்டத்தில் உள்ள கெவாடியாவை அடைவார்.

சனிக்கிழமையன்று, கெவடியாவை அகமதாபாத்துடன் இணைக்கும், நீரிலும் வானிலும் செல்லும் சீப்ளேன் எனப்படும் விமானச் சேவையை அவர் தொடங்கி வைப்பார்''.

இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in