சீக்கிய புனித நூலை அவமதித்ததாக போராட்டம்: பஞ்சாப் வன்முறைக்கு 2 இளைஞர்கள் பலி- ஐஜிபி உட்பட 75 பேர் காயம்

சீக்கிய புனித நூலை அவமதித்ததாக போராட்டம்: பஞ்சாப் வன்முறைக்கு 2 இளைஞர்கள் பலி- ஐஜிபி உட்பட 75 பேர் காயம்
Updated on
1 min read

பஞ்சாப் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று நடைபெற்ற போராட்டத்தில் ஈடுபட்ட பொது மக்களுக்கும் போலீஸாருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் 2 இளைஞர்கள் பலியாயினர். மேலும் போலீஸ் இன்ஸ்பெக்டர் (ஐஜிபி) உட்பட 75 பேர் காயமடைந்தனர்.

பரித்கோட் மாவட்டம் புர்ஜ் ஜவஹர் சிங் வாலா கிராமத்தில் உள்ள குருத்வாராவில் இருந்த புனித நூல் கடந்த ஜூன் 1-ம் தேதி காணாமல் போனதாக கூறப்படுகிறது. இந்நிலையில், இந்த நூலை அவமதித்ததாகக் கூறி கொட்கபுரா பகுதியில் திங்கள்கிழமை முதல் போராட்டம் நடைபெற்றது. நேற்று இந்தப் போராட்டம் பல்வேறு பகுதிகளுக்கும் பரவியது.

இதுகுறித்து பரிட்கோட் மாவட்ட காவல் துறை மூத்த கண்காணிப்பாளர் சுக்விந்தர் சிங் கூறியதாவது:

சீக்கியர்களின் புனித நூலை அவமதித்ததாகக் கூறி, பரித்கோட் மாவட்டத்தின் பெபல் கலன் கிராமத்தில் பல்வேறு சீக்கிய அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, அங்கு விரைந்து சென்ற போலீஸார் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தினர்.

பெரிய அளவில் மோதல் வெடித்ததையடுத்து போராட்டக் காரர்கள் மீது போலீஸார் கண்ணீர் புகை குண்டுகளை வீசியதுடன் தற்காப்புக்காக துப்பாக்கிச் சூடும் நடத்தினர். கூட்டத்தைக் கலைப்பதற்காக தண்ணீரை பீய்ச்சி அடித்தனர்.

இந்த மோதலில் 20 வயது மதிக்கத்தக்க 2 இளைஞர்கள் பலியாயினர். பதிண்டா மண்டல ஐஜிபி ஜே.கே. ஜெயின், 15 போலீஸார் உட்பட 75 பேர் காயமடைந்தனர். இதுதொடர்பாக 500 பேர் கைது செய்யப்பட்டனர். இதனால் இங்கு பதற்றம் நிலவுகிறது. எனினும் நிலைமை கட்டுக்குள் வந்துள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மேலும் இதே காரணத்துக்காக சங்ருர் மற்றும் மோகா உட்பட மாநிலத்தின் பல்வேறு பகுதியிலும் மோதல் ஏற்பட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in