Published : 02 May 2014 09:08 AM
Last Updated : 02 May 2014 09:08 AM

உலகில் சிறந்த 100 பல்கலைக்கழகங்களில் குவாஹாத்தி ஐ.ஐ.டி.க்கு 87-வது இடம்: தரவரிசையில் முதன்முதலாக இடம்பிடித்தது இந்தியா

உலகின் தலைசிறந்த 100 பல்கலைக்கழகங்கள் பட்டியலில் குவாஹாட்டி ஐ.ஐ.டி 87-வது இடம்பிடித்துள்ளது. இந்தியக் கல்விநிறுவனம் ஒன்று முதல் 100 இடங்களுக்குள் இடம் பிடிப்பது இதுவே முதல்முறையாகும். இப்பட்டியலில் சீனா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகளின் பல்கலைக் கழகங்கள் இடம் பிடிக்கவில்லை.

பிரிட்டனின் ‘டைம்ஸ் ஹையர் எஜுகேஷன்’ இதழ் 2014-ம் ஆண்டுக்கான தலைசிறந்த 100 பல்கலைக்கழகங்கள் பட்டியலை வியாழக்கிழமை வெளியிட்டது.

கடந்த 50 ஆண்டுகளுக்குள் தொடங்கப்பட்ட கல்வி நிறுவனங் கள் மட்டுமே இப்பட்டியலில் தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளன.

இப்பட்டியலில், தென் கொரியா வின் போஹாங் அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் தொடர்ந்து 3-வது ஆண்டாக முதலிடம் பிடித்துள்ளது. குவாஹாட்டி ஐஐடி, போர்ச்சு கல்லின் லிஸ்பன் புதிய பல்கலைக் கழகம், ஆஸ்திரேலியாவின் வெஸ்டர்ன் சிட்னி பல்கலைக்கழகம் ஆகியவை 87-வது இடத்தைப் பகிர்ந்து கொண்டுள்ளன.

இது தொடர்பாக தரவரிசைப் பட்டியலின் ஆசிரியர் பில் பாட்டி கூறியதாவது: மிகச்சிறந்த ஞானமரபையும், சமூக மற்றும் பொருளாதாரத்தில் வளர்ச்சி பெற்று வருவதுமான இந்தியாவின் வேறெந்த பல்கலைக்கழகங்களும் முதல் 200 இடங்களுக்குள் இடம் பிடிக்காதது தீவிர கவலைக்குரிய விஷயமாகும்.

அதே சமயம் பிரிக் நாடுகளில் ரஷ்யா, சீனா மற்றும் தென்னாப் பிரிக்காவின் பல்கலைக் கழகங்கள் முதல் 100 இடங்களுக்குள் தகுதி பெறாத நிலையில், குவாஹாட்டி ஐஐடி, 87-வது இடத்தைப் பிடித்துள்ளது. இது, அடுத்த தலைமுறைக்கான உலக பல்கலைக்கழகங்கள் வரிசையில் இந்தியாவுக்கு ஊக்கமளிக்கும் வகையில் உள்ளது. ஆசியாவிலிருந்து அதிக பல்கலைக்கழகங்கள் இப்பட்டிய லில் இடம்பிடித்துள்ளன.

சுவிட்ஸர்லாந்தின் எகோல் பாலி டெக்னிக் பெடரல் டி லாஸன்னே 2-வது இடத்தைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது. 3-வது இடத்தை தென்கொரியாவின் கொரியா அட்வான்ஸ்டு இன்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸ் அண்டு டெக்னாலஜி பிடித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x