

"நான் ஒரு சன்யாசி, அமித் ஷா என்னை நோக்கினார், நானும் அவரை நோக்கினேன், அதுதான் நடந்தது” என்றார் பாஜக எம்.பி. சாக்ஷி மகராஜ்.
தாத்ரி படுகொலைக்குப் பிறகு சமூகத்தில் பிளவை ஏற்படுத்தும், மோதலை உருவாக்கும் கருத்துகளை தெரிவித்ததற்காக சாக்ஷி மகராஜ் மற்றும் சங்கித் சாம் ஆகியோரை பாஜக தலைவர் அமித் ஷா கடுமையாக எச்சரித்ததாக வெளியாக செய்திகள் தவறு என்று அவர்கள் இருவரும் மறுத்து விளக்கம் அளித்துள்ளனர்.
ஹரியாணா முதல்வர் மனோகர் லால் கத்தார் கூறும்போது, ‘‘முஸ்லிம்கள் இந்தியாவில் வாழலாம். ஆனால், மாட்டிறைச்சி உண்பதை நிறுத்த வேண்டும்’’ என்றார். ‘‘தாத்ரி படுகொலை ஒரு விபத்து’’ என்று மத்திய அமைச்சர் மகேஷ் சர்மா கூறினார்.
பாஜக எம்எல்ஏ சங்கீத் சோம் என்பவர் கூறும்போது, ‘‘தாத்ரி சம்பவத்தில் அப்பாவிகள் மீது போலீஸார் வழக்கு பதிவு செய் கின்றனர். தொடர்ந்து இதுபோல் நடந்தால், கடந்த 2013-ம் ஆண்டு முசாபர்நகரில் ஏற்பட்ட கலவரம் போல், திருப்பி பதிலடி தருவோம்’’ என்று பேசினார். தவிர மத்திய கலாச்சார துறை அமைச்சர் சாக் ஷி மகராஜ் தொடர்ந்து சர்ச்சைக் குரிய வகையில் பேசி வருகிறார். இதனால் பாஜக.வுக்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பி உள்ளன.
இதன் தொடர்ச்சியாக, சர்ச்சைக்குரிய வகையில் பேசி வரும் மேற்கூறிய தலைவர்களை, பாஜக தேசிய தலைவர் அமித் ஷா நேற்று டெல்லிக்கு நேரில் வரவழைத்து கடும் கண்டனம் தெரிவித்தார். தாத்ரி சம்பவம் வேதனையானது, துரதிருஷ்டவசமானது என்று பிரதமர் மோடி கூறிய பிறகு, சர்ச்சைக்குரிய வகையில் பேசி வருவது கடும் கண்டனத்துக்கு உரியது. இனிமேல் இப்படி பேசக் கூடாது என்று அந்த தலைவர்களை அமித் ஷா கடுமையாக எச்சரித்தார் என்று பாஜக வட்டாரங்கள் நேற்று தெரிவித்தன.
இந்நிலையில், இந்த ஊடகச் செய்திகளை சாக்ஷி மகராஜ், சங்கீத் சோம் ஆகியோர் கடுமையாக மறுத்தனர். இது குறித்து சங்கீத் சோம் கூறும்போது, “எச்சரிக்கை என்ற பேச்சுக்கே இடமில்லை. ஒருவர் தவறு செய்யும் போதுதான் எச்சரிக்கை விடுக்கப்படும். அவர் எங்கள் தலைவர். நாங்கள் அடிக்கடி சந்தித்து வருகிறோம்.
உத்தரப் பிரதேசத்தில் சமாஜ்வாதி கட்சி ஒரு சமூகத்தினருக்கு சார்பாக நடந்து கொள்வதை பாஜக கவனித்து வருகிறது. இதில் தெளிவாகவும் உள்ளது. தாத்ரி குறித்து எனது கருத்தும் இந்தக் கோணத்தில் தெரிவிக்கப்பட்டதே. எனவே கட்சி என்னைச் சாடியது அல்லது எச்சரித்தது என்ற பேச்சுக்கு இங்கு இடமில்லை.
தாத்ரி கொலைக்குக் காரணமானவர்களை தண்டிக்க வேண்டும் என்றும், ஆனால் சமாஜ்வாதி கட்சி அப்பாவி இந்துக்களை துன்புறுத்தக் கூடாது என்றும் கூறினேன்” என்றார் சோம்.
இதனிடையே, சாக்ஷி மகராஜ் தி இந்து (ஆங்கிலம்) நாளிதழுக்கு தெரிவிக்கும் போது, “ஊடகங்கள் சரிபார்த்து பிறகு செய்தியை வெளியிடவேண்டும். நான் 5 முறை எம்.பி.ஆகியிருக்கிறேன். எனவே என்னை அழைத்து அமித் ஷா சாடினார், எச்சரித்தார் என்றெல்லாம் செய்தி வெளியிடுவது பொறுப்பான பத்திரிகை தர்மம் ஆகாது.
நான் ஒரு சன்யாசி, நான் அவரை நோக்கினேன், அவர் என்னை நோக்கினார், அவ்வளவுதான் நடந்தது” என்றார் அவர்.