

கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் எந்த அளவிற்கு தரம் தாழ்ந்துள்ளனர் என்பது இன்று வெட்ட வெளிச்சமாகியுள்ளது என்று மத்திய அமைச்சர் முரளிதரன் விமர்சித்துள்ளார்.
இந்த போதை மருந்துக் கடத்தல் கும்பலுக்கும், கேரள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கொடியேறி பாலகிருஷ்ணன் மகன் பினீஷ் கொடியேறிக்கும் இடையே தொடர்பு இருப்பதாக தேசிய போதை மருந்துத் தடுப்புப் பிரிவினருக்குத் தெரியவந்தது. இந்தக் கும்பலுக்குத் தேவையான நிதியுதவியை பினீஷ் கொடியேறி செய்து வந்ததாகவும் விசாரணையில் தெரியவந்தது.
தேசிய போதைமருந்து தடுப்புப் பிரிவினர் கிரிமினல் புகார் அளித்ததைத் தொடர்ந்து அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கினர். இது தொடர்பாக கடந்த மாதம் 9-ம் தேதி பினீஷ் கொடியேறிக்கு நோட்டீஸ் அனுப்பிய அமலாக்கப் பிரிவினர், பெங்களூருவுக்கு பினிஷ் கொடியேறியை வரவழைத்து, ஏறக்குறைய 10 மணி நேரத்துக்கும் மேலாக விசாரணை நடத்தினர்.
போதை மருந்து கடத்தல் கும்பலின் முக்கியக் குற்றவாளி அனூப்புக்கும், கேரளத் தங்கக் கடத்தல் கும்பலில் கைதாகியிருக்கும் சிலருக்கும் தொடர்பு இருப்பதும் தெரியவந்தது. மேலும், அனூப்பிடம், பினீஷ் கொடியேறி பலமுறை செல்போனில் பேசியுள்ள ஆதாரங்களையும் அமலாக்கப் பிரிவினர் எடுத்தனர். இதனால், தங்கக் கடத்தல் வழக்கிலும் பினீஷ் கொடியேறிக்குத் தொடர்பு இருப்பதாகவும் அமலாக்கப் பிரிவினர் சந்தேகப்பட்டனர்.
இதையடுத்து, பெங்களூருவுக்கு இன்று விசாரணைக்கு வருமாறு அமலாக்கப் பிரிவினர் பினீஷ் கொடியேறிக்கு நோட்டீஸ் அனுப்பி இருந்தனர். இதை ஏற்று பெங்களூரு சாந்தி நகரில் இருக்கும் அமலாக்கப் பிரிவு அலுவலகத்துக்கு பினீஷ் கொடியேறி காலை 11 மணிக்குச் சென்றார்.
அவரிடம் விசாரணை நடத்திய அமலாக்கப் பிரிவு அதிகாரிகள், சட்டவிரோதப் பணப் பரிமாற்றம் செய்ததற்கான முகாந்திரம் இருப்பதாகக் கூறி பினீஷ் கொடியேறியைக் கைது செய்தனர்.
இதுகுறித்து மத்திய அமைச்சர் முரளிதரன் கூறியதாவது:
கேரள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர் கொடியேறி பாலகிருஷ்ணன் மகன் பினீஷ் கொடியேறி, போதை மருந்து கடத்தல் வழக்கில் சட்டவிரோதப் பணிப்பரிமாற்றம் செய்த குற்றச்சாட்டில் அமலாக்கப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் எந்த அளவிற்கு தரம் தாழ்ந்துள்ளனர் என்பது இன்று வெட்ட வெளிச்சமாகியுள்ளது. மக்களுக்காக பணியாற்றுவதாக கூறும் இவர்களின் உண்மை சொரூபத்தை மக்கள் இன்று பார்க்கின்றனர்.
இவ்வாறு முரளிதரன் கூறினார்.