Last Updated : 29 Oct, 2020 03:23 PM

 

Published : 29 Oct 2020 03:23 PM
Last Updated : 29 Oct 2020 03:23 PM

தவறு செய்துவிட்டேன்; சமாஜ்வாதி கட்சியைத் தோற்கடிக்க பாஜகவுக்குக் கூட வாக்களிப்போம்: அகிலேஷ் மீது மாயாவதி தாக்கு

உத்தரப் பிரதேசத்தில் சமாஜ்வாதி கட்சியைத் தோற்கடிக்க பாஜகவுக்குக் கூட வாக்களிப்போம் அல்லது வேறு எந்தக் கட்சிக்காவது வாக்களிப்போம். ஆனால், சமாஜ்வாதியின் தோல்வியை உறுதி செய்து கொள்ளுங்கள் என்று பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி ஆவேசமாகத் தெரிவித்தார்.

உத்தரப் பிரதேசத்தில் எதிர் துருவங்களாக இருந்த சமாஜ்வாதி கட்சியும், பகுஜன் சமாஜ் கட்சியும், 2019-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் இணைந்து போட்டியிட்டன. ஆனால், இந்தக் கூட்டணியை மக்கள் ஏற்காததால், படுதோல்வி அடைந்தது. தேர்தல் முடிந்த சில நாட்களில் கூட்டணி முறிந்துவிட்டதாக மாயாவதி அறிவித்தார்.

இருப்பினும், அவ்வப்போது அகிலேஷ் யாதவையும், சமாஜ்வாதி கட்சியையும் வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் மாயாவதி விமர்சித்து வந்தார். இந்நிலையில், உத்தரப் பிரதேசத்தில் வரும் நவம்பர் 9-ம் தேதி 10 மாநிலங்களவை உறுப்பினருக்கான தேர்தல் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலில் சமாஜ்வாதி கட்சிக்கு ஒரு இடம் கிடைக்கும், ஆனால், 2 இடங்களைப் பெறுவதற்கான முயற்சியில் அக்கட்சி இறங்கியுள்ளது.

இந்தச் சூழலில் பகுஜன் சமாஜ் கட்சியின் 6 எம்எல்ஏக்கள் நேற்று சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவைச் சந்தித்துள்ளனர். அவர்கள் விரைவில் சமாஜ்வாதி கட்சியில் சேரப்போவதாவும் தெரிவித்துள்ளனர்.

மேலும், பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலங்களவை வேட்பாளர் கவுதமை தாங்கள் ஆதரித்ததாக அளித்த கடிதம் போலியானது என்று தேர்தல் அதிகாரியிடம் பகுஜன் சமாஜ் கட்சி எம்எல்ஏக்கள் தெரிவித்துள்ளனர்.

இதனால் உத்தரப் பிரதேசத்தில் பகுஜன் சமாஜ் கட்சிக்குப் பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இதனால் கடும் அதிருப்தியும், ஆவேசமும் அடைந்த மாயாவதி நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார்.

அதில் அவர் கூறியதாவது:

''உத்தரப் பிரதேச மேலவைத் தேர்தலில் அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சியைத் தோற்கடிக்க நாங்கள் பாஜகவுக்குக் கூட வாக்களிக்கத் தயாராக இருக்கிறோம் அல்லது வேறு எந்தக் கட்சிக்கும் வாக்களிப்போம்.

கடந்த 1995-ம் ஆண்டு சமாஜ்வாதி கட்சித் தலைவர் முலாயம் சிங் மீது போடப்பட்ட வழக்கை வாபஸ் பெற்றது நான் செய்த மிகப்பெரிய தவறு. மாநிலங்களவைத் தேர்தல், எதிர்காலத்தில் உ.பி.யில் நடக்கும் மேலவை உறுப்பினர் தேர்தலில் சமாஜ்வாதி கட்சியைத் தோற்கடிக்க முடிவு செய்துள்ளோம்.

இதற்காக எங்கள் முழு சக்தியையும் பயன்படுத்துவோம். இதற்காக பாஜகவுக்குக் கூட வாக்களிப்போம். சமாஜ்வாதி கட்சியின் வேட்பாளரைத் தோற்கடிக்கும் வகையில் எந்தக் கட்சி வேட்பாளர் செயல்பட்டாலும் அவர்களைப் பகுஜன் சமாஜ் கட்சி ஆதரிக்கும்.

கடந்த மக்களவைத் தேர்தலில் அகிலேஷ் யாதவுடன் நாங்கள் கூட்டணி வைத்து மிகப்பெரிய தவறு செய்துவிட்டோம். அவர்களுடன் நாங்கள் இணைந்திருக்கக் கூடாது. அதனால்தான் மோசமான தோல்வியைச் சந்தித்தோம். வெறுப்பின் காரணமாகவே தவறான முடிவை எடுத்தோம்.

மக்களவையில் நாங்கள் சமாஜ்வாதியுடன் கூட்டணி வைத்த முக்கியக் காரணமே, மதவாதக் கட்சிகள் ஆட்சிக்கு வரக்கூடாது என்பதற்காகத்தான். அவர்களின் குடும்பத்தினரிடையே ஏற்பட்ட மோதலால் சமாஜ்வாதி கட்சியும், பகுஜன் சமாஜ் கட்சியும் எதிர்பார்த்த வெற்றியைப் பெற முடியவில்லை. மக்களவைத் தேர்தல் முடிந்தபின் வழக்கம்போல் சமாஜ்வாதி கட்சியினர் செயல்படத் தொடங்கினர்''.

இவ்வாறு மாயாவதி தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x