

பாஜக மூத்த தலைவரும், குஜராத் முன்னாள் முதல்வருமான கேசுபாய் படேல் உடல்நலக் குறைவால் இன்று காலமானார். அவருக்கு வயது 92.
கடந்த சில ஆண்டுகளாகவே, நீண்ட உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த கேசுபாய் படேல் கரோனா தொற்றாலும் பாதிக்கப்பட்டார். இருப்பினும் மருத்துவர்கள் அளித்த தீவிர சிகிச்சையால் கரோனா தொற்றிலிருந்து மீண்டார்.
இந்நிலையில் திடீரென நேற்று கேசுபாய் படேலுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டு அகமதாபாத்தில் உள்ள ஸ்டெர்லிங் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். ஆனால், அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் இன்று காலை 11.51 மணிக்கு உயிரிழந்தார் என்று அவரின் குடும்ப உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.
கேசுபாய் படேல் மறைவு குறித்து அவரின் மகன் பாரத் படேல் கூறுகையில், “என் தந்தை சமீபத்தில்தான் கரோனாவிலிருந்து குணமடைந்தார். ஆனாலும், உடல்நிலை மோசமடைந்து வந்தது. புதன்கிழமை உடல்நிலை மோசமடைந்ததால், அவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றோம். ஆனால், சிகிச்சை பலனளிக்காமல் இன்று காலமானார்” எனத் தெரிவித்தார்.
கடந்த 1928-ம் ஆண்டு குஜராத் மாநிலம், ஜூனாகத் மாவட்டத்தில் விஸாவடார் நகரில் கேசுபாய் படேல் பிறந்தார். அதன்பின், ஆர்எஸ்எஸ் அமைப்பின் மீது ஈர்ப்பு ஏற்பட்டு அதில் சேர்ந்து முழுநேரத் தொண்டராக கடந்த 1945-ம் ஆண்டுவரை பணியாற்றினார். அதன்பின் ஜனசங்கத்தின் ஊழியராக தனது அரசியல் வாழ்க்கையை கேசுபாய் படேல் தொடங்கினார்.
குஜராத் மாநிலத்தில் பாஜக சார்பில் போட்டியிட்டு 6 முறை சட்டப்பேரவை உறுப்பினராகக் கேசுபாய் படேல் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். காலாவட், கோண்டர், விஸாவடார் தொகுதியில் போட்டியிட்டு கேசுபாய் படேல் வென்றுள்ளார். ஜனசங்கம் கலைக்கப்பட்டு, பாஜக தோற்றுவிக்கப்பட்டபோது, அதில் மூத்த நிர்வாக உறுப்பினராக கேசுபாய் படேல் இருந்துவந்தார்.
கடந்த 1990-ம் ஆண்டு மார்ச் முதல் அக்டோபர் வரை குஜராத்தின் துணை முதல்வராக கேசுபாய் படேல் இருந்தார். அதன்பின் 1995-ம் ஆண்டு குஜராத் முதல்வராக கேசுபாய் படேல் பொறுப்பேற்றார். ஆனால், தனது அமைச்சரவையில் மூத்த அமைச்சர் சங்கர் சிங் வகேலே தனக்கு எதிராகப் புரட்சி செய்ததையடுத்து கேசுபாய் படேல் 7 மாதங்களில் முதல்வர் பதவியை ராஜிமாமா செய்தார்.
அதன்பின் பாஜகவிலிருந்து பிரிந்து சென்ற சங்கர் சிங், ராஷ்ட்ரிய ஜனதா கட்சியைத் தோற்றுவித்து, காங்கிரஸ் ஆட்சியில் 1996-ல் ஆட்சியில் அமர்ந்தார். ஆனால், காங்கிரஸ் கட்சி ஆதரவை வாபஸ் பெற்றதையடுத்து சங்கர் சிங் ஆட்சி கவிழ்ந்தது.
இதையடுத்து மீண்டும் பாஜக ஆட்சிக்கு வந்து 1998-முதல் 2001 வரை ஆட்சியில் இருந்தது. அப்போது கேசுபாய் படேல் முதல்வராகப் பதவி வகித்தார்.
அதன்பின் உடல்நலக் குறைவு, மோசமான நிர்வாகம், ஊழல், இடைத் தேர்தல்களில் பாஜக தோல்வி ஆகியவற்றால் கேசுபாய் படேல், 2001-ம் ஆண்டு மார்ச் மாதம் பதவியிலிருந்து விலகினார். அதைத் தொடர்ந்து முதல்வராக நரேந்திர மோடி பதவி ஏற்றார்.
அதன்பின் கடந்த 2012-ம் ஆண்டு பாஜகவிலிருந்து விலகிய கேசுபாய் படேல், குஜராத் பரிவர்த்தன் கட்சியைத் தொடங்கி 2012-ம் ஆண்டு தேர்தலில் போட்டியிட்டார். ஆனால், அதில் கேசுபாய் படேல் கட்சி மோசமான தோல்வியைத் தழுவியதையடுத்து, அவர் மீண்டும் பாஜகவில் தனது கட்சியை இணைத்துக்கொண்டார்.
பிரதமர் மோடி ட்விட்டரில் பதிவிட்ட இரங்கல் செய்தியில், “நம்முடைய அன்புக்குரிய, மதிப்புக்குரிய தலைவர் கேசுபாய் படேல் காலமாகிவிட்டார். அவரின் மறைவுச் செய்தி கேட்டு ஆழ்ந்த வேதனையும், வருத்தமும் அடைகிறேன். சமூகத்தில் ஒவ்வொரு பிரிவினரின் முன்னேற்றத்துக்கும் பங்காற்றிய சிறந்த தலைவர். குஜராத் மாநில முன்னேற்றத்துக்கும், மக்கள் நல்வாழ்வுக்கும் தனது வாழ்வை அர்ப்பணித்தவர்” எனத் தெரிவித்துள்ளார்.
குஜராத் முதல்வர் விஜய் ரூபானி கூறுகையில், “ ஜனசங்கம், பாஜகவின் தலைசிறந்த தலைவர் கேசுபாய் படேல் இன்று காலமாகிவிட்டார். தேசத்துக்காகவும், விவசாயிகளுக்காகவும் தனது வாழ்நாளை அர்ப்பணித்தவர். அவரின் மறைவு பாஜகவுக்குப் பெரும் இழப்பு” எனத் தெரிவித்துள்ளார்.