Last Updated : 29 Oct, 2020 01:12 PM

 

Published : 29 Oct 2020 01:12 PM
Last Updated : 29 Oct 2020 01:12 PM

கேரள தங்கக் கடத்தல் வழக்கு: ஐஏஎஸ் அதிகாரி சிவசங்கரை 7 நாள் காவலில் விசாரிக்க அமலாக்கப் பிரிவுக்கு அனுமதி

அமலாக்கப் பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட ஐஏஎஸ் அதிகாரி சிவசங்கர் : படம் | ஏஎன்ஐ.

கொச்சி

கேரள தங்கக் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கேரள அரசின் முன்னாள் முதன்மைச் செயலாளரும், மூத்த ஐஏஎஸ் அதிகாரியுமான எம்.சிவசங்கரை 7 நாட்கள் காவலில் விசாரிக்க அமலாக்கப் பிரிவுக்குச் சிறப்பு நீதிமன்றம் இன்று அனுமதியளித்தது.

கேரளாவில் ஐக்கிய அரபு அமீரக தூதரகத்தைப் பயன்படுத்தி கடத்தப்பட்ட 30 கிலோ தங்கத்தைச் சுங்கத்துறையினர் கடந்த ஜூன் 5-ம் தேதி பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக அந்தத் தூதரகத்தின் முன்னாள் ஊழியர் சரித் குமார் என்பவரைக் கைது செய்தனர்.

பின்னர் அந்த வழக்கு என்ஐஏ விசாரணைக்கு மாற்றப்பட்டது. சரித் குமார் அளித்த தகவலின்படி, ஸவப்னா சுரேஷ், சந்தீப் நாயர் ஆகியோரை என்ஐஏ அமைப்பினர் கைது செய்தனர்.

இதில் முக்கியக் குற்றவாளியாகக் கூறப்படும் ஸ்வப்னா சுரேஷ் ஐக்கிய அரபு அமீரகத் தூதரகத்தின் முன்னாள் ஊழியர். இவர் கேரள அரசின் தகவல் தொழில்நுட்பத் துறையில் விற்பனை மேலாளராக இருந்தபோதுதான் இந்தக் குற்றச்சாட்டில் சிக்கினார்.

ஸ்வப்னா சுரேஷுக்கும், தகவல் தொழில்நுட்பத் துறைச் செயலாளராகவும், முதல்வரின் தனிப்பிரிவு முதன்மைச் செயலாளராகவும் இருந்த சிவசங்கருக்கும் தொடர்பு இருந்தது தெரியவந்ததையடுத்து, அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

தங்கக் கடத்தில் வழக்குத் தொடர்பாக ஐஏஎஸ் அதிகாரி சிவசங்கரிடம் சுங்கத்துறையினரும், என்ஐஏ அமைப்பினர், அமலாக்கப் பிரிவினர் பல முறை விசாரணை நடத்தி உள்ளனர்.

சட்டவிரோதப் பணப் பரிமாற்றம் தொடர்பாக சிவசங்கரிடம் அமலாக்கப் பிரிவினர் விசாரணை நடத்தியபோது, அதில் அவர் கைது செய்யப்படுவதற்கான முகாந்திரம் இருப்பதாகத் தகவல்கள் வெளியாகின.
இந்த வழக்குத் தொடர்பாக சுங்கத்துறை, அமலாக்கப் பிரிவு தனித்தனியாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

இந்நிலையில் மூத்த ஐஏஎஸ் அதிகாரி சிவசங்கர் சார்பில் திருவனந்தபுரம் உயர் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை ஏற்ற நீதிமன்றம், 28-ம் தேதிவரை சிவசங்கரைக் கைது செய்ய அமலாக்கப் பிரிவுக்குத் தடை விதித்தது.

இந்தச் சூழலில் உயர் நீதிமன்றத்தில் நேற்று மீண்டும் சிவசங்கர் மனு விசாரணைக்கு வந்தது. அப்போது, சிவசங்கரைக் கைது செய்யத் தடை விதித்து உத்தரவை நீட்டிக்க அமலாக்கப் பிரிவு சார்பில் கடும் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, சிவசங்கர் ஜாமீன் மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இதையடுத்து நேற்று இரவு மூத்த ஐஏஎஸ் அதிகாரி சிவசங்கரை அமலாக்கப் பிரிவினர் கைது செய்தனர். அவருக்கு இரவே மருத்துவப் பரிசோதனை உள்ளிட்ட சோதனைகளை அமலாக்கப் பிரிவினர் அரசு மருத்துவமனையில் முடித்தனர்.

இந்நிலையில் இன்று காலை எர்ணாகுளத்தில் உள்ள சிறப்பு முதன்மை நீதிமன்றத்தில் சிவசங்கரை அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் ஆஜர்படுத்தினர். தங்கக் கடத்தல் வழக்குத் தொடர்பாகவும், சட்டவிரோதப் பணப் பரிமாற்றம் தொடர்பாகவும் சிவசங்கரை 14 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கப் பிரிவு சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி, 14 நாட்கள் காவல் வழங்க மறுத்துவிட்டார், 7 நாட்கள் மட்டுமே காவலில் விசாரிக்க அனுமதியளித்து உத்தரவிட்டார். வரும் நவம்பர் 7-ம் தேதி மீண்டும் சிவசங்கரை நேரில் ஆஜர்படுத்த வேண்டும் என்று நீதிபதி அமலாக்கப் பிரிவு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x