

கரோனா பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, ‘ஆரோக்கிய சேது’ என்ற செயலியை மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அறிமுகப்படுத்தியது. இந்நிலையில், டெல்லியைச் சேர்ந்த சவுரவ் தாஸ் தகவல் உரிமை சட்டத்தின் கீழ் (ஆர்டிஐ), ‘ஆரோக்கிய சேது’ செயலியை வடிவமைத்தது யார் எனக் கேட்டு விண்ணப்பித்திருந்தார். ஆனால், இந்த செயலியை வடிவமைத்தது யார் என்பது குறித்த விவரம் தங்களுக்கு தெரியாது என மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறையின் கீழ் இயங்கி வரும் தேசிய தகவல் மையம் பதிலளித்திருந்தது.
இதுகுறித்து மத்திய தகவல் ஆணையருக்கு சவுரவ் தாஸ் புகார் அளித்தார். இதைப் பரிசீலித்த மத்திய தகவல் ஆணையர் (சிஐசி) வனஜா சர்னா, இதற்கு விளக்கமளிக்குமாறு தேசிய தகவல் மையத்துக்கு நேற்று நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.
அதில், “ஆரோக்ய சேது செயலியில் தேசிய தகவல் மையத்தின் பெயர் இடம்பெறுகிறது. அவ்வாறு இருக்கும்போது, அதனை வடிவமைத்தது யார் என்ற விவரம் உங்களுக்கு தெரியாதது ஏன்? இந்தக் கேள்விக்கு விளக்கம் அளிப்பதுடன், சம்பந்தப்பட்ட ஆர்டிஐ விண்ணப்பதாரருக்கு உடனடியாக உரிய பதிலை வழங்க வேண்டும்” என கூறப்பட்டுள்ளது.