

பிஹாரில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ஜனநாயகத்தை காங்கிரஸ் ஆட்சி பலப்படுத்தியதால்தான் மோடி பிரதமராக முடிந்தது என்று பேசியுள்ளார்.
பக்சார் தொகுதியில் அவர் உரையாற்றிய போது பேசியது:
பாஜக அரசு ஜனநாயக லட்சியங்களை விட்டு விலகிச் சென்று கொண்டிருக்கிறது. தங்களது (மதச்சார்பு) கொள்கைகளை மக்களிடம் திணிப்பதன் மூலம் ஜனநாயகத்துக்கு பாஜக பெரும் அச்சுறுத்தலாக விளங்குகிறது. மதவாத பதற்ற சூழ்நிலைகள் உருவாகின்றன.
வதந்திகள் மூலம் அப்பாவி மக்கள் கொல்லப்படுகின்றனர். அறிவுஜீவிகள் கருத்துச் சுதந்திரம் மறுக்கப்படுகிறது, அவர்கள் தாக்கப்படுகின்றனர். சமூக ஒற்றுமையின் அடிப்படையை பலவீனப் படுத்த பாஜக முயற்சி செய்கிறது. இது வருத்தம் தருவது மட்டுமல்ல, வெட்கக் கேடானது.
இந்தத் தருணத்தில், குறிப்பாக இளைஞர்களிடத்தில் ஒன்றைத் தெரிவிக்க விரும்புகிறேன், காலனிய ஆதிக்கம் காரணமாக நம் நாட்டில் ஏதுமில்லாத நிலை இருந்த காலம் உண்டு. கடந்த 60 ஆண்டுகளில் காங்கிரஸ் ஆட்சி, கல்வி, சுகாதாரம், ஆரோக்கியம், வேளாண்மை, தொழிற்துறை, அணுசக்தி மற்றும் பிற துறைகளில் புரட்சிகர மாற்றங்களை ஏற்படுத்தியது.
நாட்டின் ஒற்றுமையை பாதுகாத்தது. நாட்டின் பாரம்பரியத்தைக் காத்தது. நாட்டை முன்னேற்றப்பாதையில் எடுத்து சென்று சமூக கட்டமைப்பை பாதுகாத்தது, இதற்காக தலைவர்களை தியாகம் செய்துள்ளது.
நாங்கள் ஜனநாயகத்தை பலப்படுத்தினோம், அதனால்தான் மோடி பிரதமராக முடிந்தது. கடந்த ஒன்றரை ஆண்டுகளாகவா இவையெல்லாம் செய்ய முடிந்த்து? காங்கிரஸ் கொண்டு வந்த முன்னேற்றங்களை பார்க்க முடியவில்லை என்றால், அது யார் தவறு? அது உங்களுடையது.
இவ்வாறு பேசினார் சோனியா காந்தி.