

கரோனா வைரஸ் தொற்று காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் வெளிநாட்டு விமான சேவைகளுக்கான தடை நவம்பர் 30-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக இந்திய விமான சேவை பொது இயக்குநரகம் தெரிவித்துள்ளது.
கரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக போக்குவரத்து சேவைகள் அனைத்தும் மார்ச் மாதம் முதல் நிறுத்தி வைக்கப்பட்டன. விமான சேவையும் மார்ச் 23 முதல் நிறுத்திவைக்கப்பட்டது. ஆனால் வெளிநாடுகளில் சிக்கிக் கொண்ட இந்தியர்களை அழைத்து வருவதற்காகவும் இந்தியாவில் சிக்கியிருந்த வெளிநாட்டினரை அவரவர் தாய்நாட்டில் சேர்க்கவும் வந்தே பாரத் என்ற திட்டத்தில் சிறப்பு விமானங்கள் அரசின் வழிகாட்டுதலின்படி இயக்கப்பட்டன.
அதன் பிறகு உள்நாட்டு விமான சேவைகள் மே 25 முதல் கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் இயக்கப்படுகின்றன. பின்னர் ஜூலை மாதம் முதல் குறிப்பிட்ட நாடுகளுக்கு மட்டும் ‘ஏர் பபுள்’ என்ற திட்டத்தின் மூலம் அவசர தேவைகளுக்காக விமானங்கள் ஒப்பந்த அடிப்படையில் இயக்கப்படுகின்றன. அமெரிக்கா, இங்கிலாந்து, ஐக்கிய அமீரகம், கென்யா, பூடான், மற்றும் பிரான்ஸ் உள்ளிட்ட 18 நாடுகளுடன் இந்தியா இந்த ஏர் பபுள் ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளது. இந்த சிறப்பு விமானங்களும், சரக்கு விமானங்களும் மட்டுமே இப்போது இயக்கப்படும்.
பிற பொதுவான வெளிநாட்டு பயண விமானங்கள் நவம்பர் 30 வரை இயக்கப்பட மாட்டாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.