Published : 29 Oct 2020 06:10 AM
Last Updated : 29 Oct 2020 06:10 AM

தங்கக் கடத்தல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட கேரள மாநில ஐஏஎஸ் அதிகாரி சிவசங்கர் கைது: முன்ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்டதால் அமலாக்கத் துறை நடவடிக்கை

கேரள தங்கக் கடத்தல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஐஏஎஸ் அதிகாரி சிவசங்கரின் முன்ஜாமீன் மனு நேற்று நிராகரிக்கப்பட்ட நிலையில், அவரை அமலாக்கத் துறை அதிகாரிகள் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

திருவனந்தபுரத்தில் உள்ள சர்வதேச விமான நிலையத்துக்கு கடந்த ஜூலை 5-ம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து சரக்குப் பெட்டிகள் வந்தன. சந்தேகத்தின் பேரில், அந்தப் பெட்டிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது, அதில் 30 கிலோ தங்கக் கட்டிகள் கடத்தி வரப்பட்டது தெரியவந்தது.

இதுதொடர்பாக தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் மேற்கொண்ட விசாரணையில், கேரள அரசின் தகவல் தொழில்நுட்பத் துறையில் பணிபுரிந்து வந்த ஸ்வப்னா சுரேஷுக்கு கடத்தலில் தொடர்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து, ஸ்வப்னா சுரேஷ்உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்டோரை என்ஐஏ அதிகாரிகள் கைது செய்தனர். அவர்கள் அனைவரும் தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்த வழக்கில் இருந்து ஸ்வப்னா சுரேஷை விடுவிக்க கேரள முதல்வரின் முதன்மைச் செயலரான ஐஏஎஸ் அதிகாரி சிவசங்கர் முயற்சித்ததாக குற்றச்சாட்டுஎழுந்தது. இதைத்தொடர்ந்து, அந்தப் பதவியில் இருந்து அவர் இடைநீக்கம் செய்யப்பட்டார்.

அதன்பிறகு, தங்கக் கடத்தல் சம்பவம் தொடர்பாக அவரிடமும் என்ஐஏ அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இதேபோல, அமலாக்கத் துறையும் அவரிடம் பலமுறை விசாரணை மேற்கொண்டது.

இதனிடையே, சிவசங்கர் சார்பில் முன்ஜாமீன் கோரி கேரள உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதை விசாரித்த உயர் நீதிமன்றம், அவரை கைது செய்ய அக்டோபர் 28-ம் தேதி (நேற்று) வரை இடைக்கால தடை விதித்திருந்தது.

இந்த கெடு முடிய இருந்த நிலையில், முன்ஜாமீன் மனு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.அப்போது சிவசங்கரின் முன்ஜாமீன்மனுவை தள்ளுபடி செய்து கேரள உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டதையடுத்து, திருவனந்தபுரத்தில் முதுகு வலிக்காக சிகிச்சை பெற்று வந்த சிவசங்கரை அமலாக்கத் துறை அதிகாரிகள் கைது செய்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x