

தமிழகத்தில் கோவிட்-19 தயார்நிலை மற்றும் சரியான நடவடிக்கைகளை உறுதி செய்வது குறித்து மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தன் காணொலிக் காட்சி வாயிலாக இன்று ஆய்வு நடத்தினார்.
மாநில சுகாதார மற்றும் மருத்துவக் கல்வி அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் மாநில அரசு உயர் அதிகாரிகள் இதில் கலந்து கொண்டனர்.
கோவிட் தொற்றுக்கு எதிரான பிரதமரின் மக்கள் இயக்கத்தை நினைவு கூர்ந்த டாக்டர் ஹர்ஷ் வர்தன், "முகக் கவசம் அணிதல், தனிநபர் இடைவெளியை கடைப்பிடித்தல் மற்றும் கைகளை சுத்தமாகக் கழுவுதல் போன்ற முக்கிய தடுப்பு வழிகள் குறித்து குடிமக்களிடம் மாநில அரசு போதிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். எதிர்வரும் நீண்ட பண்டிகைக் காலம், கோவிட் 19 நோய் தொற்றுக்கு எதிராக இதுவரை எடுத்துள்ள நடவடிக்கைகளுக்கு ஒரு சவாலாக அமையக்கூடும்.
எனவே அடுத்து வரவிருக்கும் மூன்று மாதங்களுக்கு நாம் அனைவரும் விழிப்புடன் இருக்க வேண்டும். எளிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் கோவிட் சரியான நடத்தை முறையை பின்பற்றுவதன் மூலம் கரோனா பரவலைக் கட்டுப்படுத்த முடியும். முகக் கவசம் அணிய வேண்டும், போதிய இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் மற்றும் முறையாக கைகளைக் கழுவ வேண்டும் என்ற பிரதமரின் தகவல் கடைசி குடிமகனையும் சென்றடைய வேண்டும்" என்று தெரிவித்தார்.
"கோவிட் பரவலைக் கட்டுப்படுத்துவதில் நாடு பெரும் முன்னேற்றத்தைச் சந்தித்துள்ளது. நாட்டில் இந்த நோயால் பாதிக்கப்பட்டோர் மற்றும் உயிரிழந்தோரின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருகிறது. தற்போது 6 லட்சத்து 10 ஆயிரத்து 803 பேர் இந்த நோயால் பாதிக்கப் பட்டுள்ளனர். உலக அளவில் இந்தியாவில்தான் குணமடைந்தோரின் எண்ணிக்கை உயர்ந்து 90.5 சதவீதம் ஆக உள்ளது. உயிரிழந்தோரின் எண்ணிக்கையும் குறைந்து 1.50 சதவிகிதமாக பதிவாகியுள்ளது. நாட்டில் இரண்டாயிரத்திற்கும் அதிகமான பரிசோதனை மையங்கள் உள்ளன" என்று அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
நாட்டில் ஏற்பட்டுள்ள மொத்த பாதிப்புடன் தமிழ்நாட்டின் பாதிப்பை ஒப்பிட்ட டாக்டர் ஹர்ஷ் வர்தன், "தமிழகத்தில் குணமடைந்தோரின் விகிதமான 94.6%, தேசிய அளவை விட அதிகம். நாட்டின் சராசரி உயிரிழப்புக்கு இணையாக உலகத்தில் உயிரிழந்தோரின் வீதம் 1.54%" என்று கூறினார்.
தமிழகத்தில் ஆரோக்கிய சேது செயலி மற்றும் மாநிலத்தில் பரவல் அதிகம் உள்ள இடங்களைக் கண்டறியும் இதிஹாஸ் தொழில்நுட்பத்தின் பயன்பாட்டை ஹர்ஷ் வர்தன் வெகுவாகப் பாராட்டினார்.
கோவிட் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கையை குறைப்பதற்காக மாநில அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளைப் பாராட்டிய மத்திய அமைச்சர், அதேசமயம் சென்னை, செங்கல்பட்டு, கோயம்புத்தூர், திருவள்ளூர், சேலம், காஞ்சிபுரம் மற்றும் கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் நோயின் தாக்கம் அதிகரித்து இருப்பது கவலையளிப்பதாக உள்ளது என்று குறிப்பிட்டார்.
நோயின் தாக்கமும் உயிரிழந்தோரின் எண்ணிக்கையும் அதிகமாக உள்ள மாவட்டங்களின் உயரதிகாரிகளுடன் டாக்டர் ஹர்ஷ் வர்தன் ஆலோசனை நடத்தினார்.
நாட்டிலேயே முதன்மை மாநிலமாக இரண்டு லட்சத்திற்கும் அதிகமான தொலைதூர மருத்துவ ஆலோசனைகளை தமிழகம் வழங்கியுள்ளதாக மாநில சுகாதார அதிகாரிகள் மத்திய அமைச்சரிடம் தெரிவித்தனர். மாநிலத்தில் மொத்தம் 96 லட்சத்து 60 ஆயிரத்து 430 பரிசோதனைகள் செய்யப்பட்டு இருப்பதாகவும் அவற்றை 98.99 சதவிகித பரிசோதனைகள் ஆர்டி- பிசிஆர் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
பரிசோதனையின் எண்ணிக்கையை அதிகரிக்கும் வகையில், சிறப்பு நோய் கண்டறியும் மையங்களும், பரிசோதனை முகாம்களும் ஏற்படுத்தப்பட்டு இருப்பதாக அவர்கள் மேலும் கூறினர். கொவிட் நோயாளிகளுக்கென பிராணவாயு வசதியுடன் கூடிய பிரத்யேக அவசர சிகிச்சை வாகனம், பொதுமக்கள் மருத்துவமனை படுக்கை விவரங்களை அறிய உதவும் ஸ்டாப் கரோனா இணையதளம் மற்றும் காய்ச்சல் மருத்துவ முகாம் ஆகிய சிறந்த நடவடிக்கைகளை மாநிலம் பின்பற்றி வருவதாக அவர்கள் மேலும் தெரிவித்தனர்.
பிரதமரின் மக்கள் இயக்கத்தை பொதுமக்களிடம் எடுத்துச் செல்வதற்காக தமிழக அரசு மேற்கொண்டு வரும் பல்வேறு நடவடிக்கைகளையும் மாநில அரசு சுகாதார அதிகாரிகள் மத்திய அமைச்சரிடம் எடுத்துரைத்தனர்.
மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் பேசுகையில், 41 முதல் 60 வயது உள்ளவர்கள் மீது கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்றும் இந்த வயதில் இருப்பவர்களை நோய் அதிகம் தாக்குவதுடன், மாநிலத்தில் மொத்தம் உயிரிழந்தவர்களில் 30 சதவிகிதம் இந்த வயதினர் என்றும் குறிப்பிட்டார். பிற நோய் பாதிப்பு உள்ளவர்களும் தொற்றினால் எளிதில் பாதிக்கப்பட இருப்பதால் அவர்கள் மீது கூடுதல் கவனம் செலுத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
மத்திய சுகாதாரத் துறை கூடுதல் செயலாளர் ஆர்த்தி அகுஜா, தேசிய நோய்த்தடுப்பு மைய இயக்குனர் சுஜித் கே சிங் ஆகியோர் இந்த கூட்டத்தில் கலந்துகொண்டனர். தமிழக உயர் அதிகாரிகள் மெய்நிகர் வாயிலாக இதில் கலந்து கொண்டனர்.