Published : 28 Oct 2020 07:31 PM
Last Updated : 28 Oct 2020 07:31 PM

கரோனா தொற்றுக்குப்பின் வர்த்தகம் மற்றும் முதலீட்டை அதிகரிக்க எஸ்சிஓ நாடுகளுக்கு இந்தியா அழைப்பு

புதுடெல்லி

கரோனா தொற்றுக்குப்பின், வர்த்தகம் மற்றும் முதலீட்டை அதிகரிக்க வேண்டும் என ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் உள்ள நாடுகளுக்கு மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் அழைப்பு விடுத்துள்ளார்.

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் (எஸ்சிஓ) உள்ள நாடுகளின் வர்த்தக அமைச்சர்களின் 19வது கூட்டத்தை காணொலி காட்சி மூலம் இந்தியா நடத்தியது.

இந்த கூட்டத்தில் தொடக்கவுரை ஆற்றிய மத்திய வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல், கரோனா தொற்று காரணமாக தற்போதுள்ள நெருக்கடியில், பொருளாதாரத்தை விரைவாக மீட்க எஸ்சிஓ நாடுகள் வர்த்தகம் மற்றும் முதலீடு திட்டங்களை ஆராய்ந்து, பொருளாதாரத்தை வலுப்படுத்த வேண்டும் என கேட்டுக் கொண்டார். எஸ்சிஓ அமைப்புக்குள் வர்த்தகம் மற்றும் முதலீடு தொடர்ந்து அதிகரிக்கும் வகையில் ஒத்துழைப்பு தொடர வேண்டும் எனவும், இது கொரோனா தொற்றுக்குப்பின் பொருளாதாரம் விரைவில் சீரடைவதை உறுதி செய்யும் என அவர் கூறினார்.

வர்த்தக மற்றும் தொழில்துறை இணையமைச்சர் ஹர்திப் சிங் பூரியும், இந்நிகழ்ச்சியில் பேசினார். கிர்கிஸ்தான், கஜகஸ்தான், பாகிஸ்தான், ரஷ்யா, தஜிகிஸ்தான் மற்றும் உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகளின் அமைச்சர்கள் இதில் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் 4 அறிக்கைகள் ஏற்றுக் கொள்ளப்பட்டன. கோவிட் 19 நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. மருந்துகள் மற்றும் வர்த்தகத்தில் சிறந்து ஒத்துழைப்புடன் எஸ்சிஓ நாடுகள் செயல்பட வேண்டிய அவசியம் குறித்து வலியுறுத்தப்பட்டது.

உலக வர்த்தக அமைப்பில் உறுப்பினர்களாக உள்ள எஸ்சிஓ நாடுகளின் அமைச்சர்களின் பலதரப்பு வர்த்தக முறை குறித்த அறிக்கையும் தாக்கல் செய்யப்பட்டது. விதிகள் அடிப்படையிலான பலதரப்பு பேச்சுவார்த்தைகளின் முக்கியத்துவத்தை இந்த அறிக்கை எடுத்துக்காட்டுகிறது.

இது தவிர, அறிவுசார் சொத்துரிமையில் எஸ்சிஓ நாடுகளின் ஒத்துழைப்பு குறித்த அறிக்கை, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் துறையில் எஸ்சிஓ நாடுகளின் ஒத்துழைப்பை அதிகரிக்கும் புரிந்துணர்வு ஒப்பந்தங்களை அமல்படுத்தும் செயல் திட்டம் குறித்த அறிக்கையும் ஏற்றுக் கொள்ளப்பட்டது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x