

சபரிமலையில் மருத்துவச் சேவை செய்ய விருப்பமுள்ள மருத்துவர்கள் உள்பட சுகாதாரத் துறையினர் முன்பதிவு செய்யலாம் என்று கேரள அரசு அறிவித்துள்ளது. இதனைக் கேரள தேவசம்போர்டு அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் வேண்டுகோளாகவே வைத்துள்ளார்.
இதுகுறித்து இன்று (அக். 28) கேரள செய்தி மக்கள் தொடர்புத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
"சபரிமலை ஐயப்பன் கோயிலில் பிரசித்தி பெற்ற மண்டல காலப் பூஜைகள் நவம்பர் மாதம் தொடங்குகிறது. இதையொட்டி, சன்னிதானம், பம்பை மற்றும் நிலக்கல் ஆகிய இடங்களில் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த மருத்துவர்கள் உள்பட சுகாதாரத் துறையினர் மருத்துவச் சேவை செய்ய முன்வர வேண்டும் என்று கேரள தேவசம்போர்டு அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இச்சேவை செய்ய விரும்புபவர்கள் http://travancoredevaswomboard.org என்ற இணையதளத்தில் நவம்பர் 5 ஆம் தேதிக்குள் முன்பதிவு செய்ய வேண்டும். தற்போது கரோனா காலம் என்பதால் பக்தர்களின் சுகாதாரப் பாதுகாப்புக்காக கூடுதல் சுகாதாரத் துறையினரின் சேவை தேவைப்படுவதால்தான் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் தெரிவித்துள்ளார்".
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.