முக்தார் அன்சாரி நீதிமன்றத்தில் ஆஜராவதைத் தவிர்க்க காங்கிரஸ் உதவியது: கணவர் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் பெண் எம்எல்ஏ குற்றச்சாட்டு

முக்தார் அன்சாரி.
முக்தார் அன்சாரி.
Updated on
1 min read

என் கணவர் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் முக்தார் அன்சாரி நீதிமன்றத்தில் ஆஜராவதைத் தவிர்க்க காங்கிரஸ் உதவியது என்று பாஜக பெண் எம்எல்ஏ அல்கா ராய் குற்றம் சாட்டியுள்ளார்.

உத்தரப் பிரதேசத்தில் கடந்த 2005-ல் எம்எல்ஏ கிருஷானந்த் ராய் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் மாநிலத்தையே உலுக்கியது. பின்னர் இவ்வழக்கு விசாரணைக்கு வந்தபோது முக்தார் அன்சாரி உள்ளிட்ட ஏழு பேரும் இந்த வழக்கில் ஆதாரங்கள் இல்லையென விடுவிக்கப்பட்டனர்.

அல்கா ராய் எம்எல்ஏ, சுட்டுக்கொல்லப்பட்ட எம்எல்ஏ கிருஷானந்த் ராயின் மனைவி ஆவார். உத்தரப் பிரதேசத்தில் கணவரின் தொகுதியான முகமதாபாத் தொகுதியிலிருந்து 2017-ல் பாஜக சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்.

ரவுடியாக இருந்து அரசியல்வாதியாக மாறியவர் முக்தார் அன்சாரி. உ.பி.யின் மவு தொகுதியைச் சேர்ந்த பகுஜன் சமாஜ் கட்சி எம்எல்ஏவாக இருக்கும் அன்சாரி, மிரட்டிப் பணம் பறித்தல் வழக்குத் தொடர்பாக பஞ்சாப் மாநிலச் சிறையில் தற்போது அடைக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக பிரியங்காவுக்கு அல்கா ராய் எழுதிய கடிதத்தில் கூறியதாவது:

"என் கணவர் கொலை வழக்கில் நீதி வேண்டி நான் கடந்த 14 ஆண்டுகளாகப் போராடி வருகிறேன். ஆனால், அன்சாரிக்கு காங்கிரஸால் வெளிப்படையான ஆதரவு கிடைத்து வருகிறது.

உத்தரப் பிரதேச நீதிமன்றங்கள் முக்தார் அன்சாரிக்கு சம்மன் அனுப்பியுள்ளன. ஆனால், அவரை உ.பி.க்கு அனுப்ப பஞ்சாப் அரசு தயாராக இல்லை. ஒவ்வொரு முறையும் எனக்கு மட்டுமின்றி, என்னைப் போன்ற பலருக்கும் ஏதோ ஒரு சாக்குப்போக்கில் நீதி கிடைக்காமல் போய்விடுகிறது.

தங்களின் கட்சியும் அதன் தலைமையிலான பஞ்சாப் மாநில அரசும் முக்தார் அன்சாரிக்கு ஆதரவாக அதுவும் வெளிப்படையாக நிற்பது மிகவும் வெட்கக்கேடானது. தங்களுக்கோ அல்லது ராகுல் காந்திக்கோ தெரியாமல் இவை எல்லாம் நடக்கின்றன என்று சொன்னால் யாரும் நம்ப மாட்டார்கள். தாங்களும் ஒரு பெண். தாங்கள் ஏன் இதைச் செய்கிறீர்கள் என்பது எனது தாழ்மையான கேள்வி. காங்கிரஸ், அருவருப்பான குற்றவாளியுடன் நிற்பது மிகவும் வருந்தத்தக்கது.

முக்தாருக்குக் கடும் தண்டனை கிடைக்கக்கூடிய அந்தத் தருணத்திற்காக பாதிக்கப்பட்ட நாங்கள் ஒவ்வொருவரும் காத்திருக்கிறோம். அவரைத் திரும்ப அழைத்து வர உ.பி. காவல்துறை சென்ற போதெல்லாம், பஞ்சாப் அரசு அவரை மருத்துவக் காரணங்களின் அடிப்படையில் ஓய்வெடுக்க அறிவுறுத்தியதன் மூலம் அவரைக் காப்பாற்றி வருகிறது என்பதை ஊடகச் செய்திகள் மூலம் தெரிந்துகொண்டேன்.

முக்தார் தொடர்பாக எழுப்பப்படும் கேள்விகளில் ராகுலும் பிரியங்காவும் ஏன் மவுனம் சாதிக்கிறார்கள் என்பதை உத்தரப் பிரதேச மக்கள் அறிய விரும்புகிறார்கள். வாக்கு வங்கியின் கட்டாயத்தின் கீழ் இந்த மோசமான குற்றவாளியை ஏன் காப்பாற்ற முயல்கிறீர்கள்?

இக்கடிதத்திற்குப் பதிலளிப்பது மட்டுமன்றி, நீதியை உறுதிப்படுத்தவும் உதவுவீர்கள் என்று நம்புகிறேன்’’.

இவ்வாறு பாஜக பெண் எம்எல்ஏ அல்கா ராய் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in