

கடத்தலுக்குக் காப்புரிமை பெற்ற கட்சி அது; காட்டாட்சியின் இளவரசனிடம் எச்சரிக்கையாக இருங்கள் என்று ஜேடிஆர் கட்சியின் முதல்வர் வேட்பாளர் தேஜஸ்வி யாதவை பிரதமர் மோடி கடுமையான விமர்சித்துப் பேசினார்.
243 உறுப்பினர்களைக் கொண்ட பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு மூன்று கட்டங்களாக நடைபெறுகிறது. முதல் கட்டமாக 16 மாவட்டங்களில் தொடங்கப்பட்டுள்ள இன்றைய வாக்குப்பதிவு 71 தொகுதிகளுக்கு நடைபெறுகிறது. மீதமுள்ள இடங்களுக்கு நவம்பர் 3 மற்றும் நவம்பர் 7 ஆகிய தேதிகளில் நடைபெறும்.
இந்நிலையில் இரண்டாம் கட்டத் தேர்தலுக்கான பிரச்சாரத்தில் கட்சிகள் ஈடுபடத் தொடங்கின.
ஐக்கிய ஜனதா தளம், பாரதிய ஜனதா கட்சி கூட்டணியை ஆதரித்து பிஹாரில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுவரும் பிரதமர் மோடி தனது இரண்டாவது தின பொதுக்கூட்டத்தில் பேசியதாவது:
''காட்டாட்சியின் இளவரசரிடமிருந்து எதை எதிர்பார்க்க முடியும்? ஏற்கெனவே அவர்களின் ஆட்சியை நீங்கள் பார்த்திருப்பீர்கள். அந்த அனுபவத்திலிருந்து அவர்களைத் தேர்ந்தெடுக்கலாமா வேண்டாமா என்பதை நீங்களே மதிப்பீடு செய்யுங்கள்.
ராஷ்டிரிய ஜனதா தளம் ஆட்சிக்கு வந்தால் 10 லட்சம் நிரந்தர அரசுப் பணிகள் கிடைக்கும் என்று தேஜஸ்வி யாதவ் வாக்குறுதி அளித்துள்ளார். அது ஒரு கவர்ச்சியான வாக்குறுதி மட்டுமே. மற்றபடி அரசுப் பொதுத்துறைகளில் வேலை என்பதையெல்லாம் மறந்துவிடுங்கள்.
ஒருவேளை அவர் ஆட்சிக்கு வந்தால் வேலை கொடுக்கும் தனியார் நிறுவனங்கள் கூட தப்பி ஓடும். அந்த நிறுவனங்கள் தங்கள் அலுவலகங்களையே மூடிவிட்டு ஓடிவிடும். மேலும், கடத்தல் தொடர்பாக காப்புரிமை பெற்ற இந்தக் கட்சியால் ஆதரிக்கப்படுபவர்களால் மிரட்டி, பணம் பறிப்பதற்கான தொலைபேசி அழைப்புகள்தான் வரும்.
ஏனெனில் இவர்கள் ஆட்சியிலிருந்தபோது 15 ஆண்டு காலமும் அதிகாரத்தில் இருந்த அவர்கள் கட்சி கிரிமினல் கும்பல்களுடன் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டது வெளிப்படையானவை. பிஹாரில் நடந்த இப்படிப்பட்ட மோசமான ஆட்சிக்குக் காரணமானவர்களுக்கு எதிராக மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.
குற்றவாளிகளை ஆதரித்தது மட்டுமின்றி ஒரு குடும்பத்தின் செல்வம் வளர்வதை உறுதி செய்த ஒரு கட்சி இது. அக்குடும்பத்தினர் ஊழல் மோசடிகளிலும் ஈடுபட்டவர்கள்.
அவர்கள் மீண்டும் வருவதற்கான வாய்ப்பிற்காகக் காத்திருக்கிறார்கள். கோவிட்-19 தொற்றுநோய்ப் பரவலுக்கு மத்தியில் அவர்களின் காட்டாட்சி திரும்பினால், அது மாநிலத்திற்கு இரட்டைப் பாதிப்பாக இருக்கும்.
நிதிஷுக்கு வாக்களியுங்கள்
பிஹாரை இருளில் இருந்து வெளியேற்றியவர்களை மீண்டும் தேர்ந்தெடுப்பதற்கான ஒரு வாய்ப்பாக இந்தத் தேர்தல் உள்ளது. எனவே நிதிஷுக்கு வாக்களியுங்கள்.
பிஹாரில் செயல்படுத்துவதற்காக மத்திய அரசு பல திட்டங்களைக் கொண்டுவந்துள்ளது. இது மாநிலத்தில் நிதிஷ் குமார் தலைமையில் அதிக அமைதியையும் செழிப்பையும் கொண்டு வரும்''.
இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.