Published : 28 Oct 2020 02:12 PM
Last Updated : 28 Oct 2020 02:12 PM

10 லட்சம் பேருக்கு 87 உயிரிழப்புகள்: இந்தியாவில் தொடர்ந்து குறைந்து வரும் மரணங்கள் 

அதிக பரிசோதனைகள், குறைந்த எண்ணிக்கையில் புதிய கரோனா தொற்றுகள் இந்தியாவில் தொடர்கிறது.

பத்து லட்சம் மக்கள் தொகைக்கு குறைந்த விகிதத்தில் கரோனா தொற்று பரவுதல் மற்றும் குறைந்த அளவு மரணம் ஏற்படும் நாடுகளில் ஒன்றாக இந்தியா தொடர்ந்து நீடிக்கிறது. அதிக பரிசோதனைகள் மேற்கொள்ளும் நாடுகள் வரிசையிலும் இந்தியா தொடர்ந்து நீடிக்கிறது.

உத்திகள், செயல்பாடுகள் மற்றும் மாநில அரசுகள், யூனியன் பிரதேசங்களுடன் இணைந்து மேற்கொள்ளப்படும் சீரான நடவடிக்கைகள் காரணமாக இந்த நிலை நீடிக்கிறது.

சர்வதேச அளவில் பத்து லட்சம் மக்கள் தொகையில் 5552 பேருக்கு தொற்று பரவியிருக்கிறது. இந்தியாவில் பத்து லட்சம் பேருக்கு 5790 பேருக்கு தொற்று பரவியிருக்கிறது. அதே நேரத்தில் அமெரிக்கா, பிரேசில், பிரான்ஸ், இங்கிலாந்து, ரஷ்யா மற்றும் தென் ஆப்ரிக்காவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை இதை விட அதிகமாக இருக்கிறது.

பத்து லட்சம் பேருக்கு 87 உயிரிழப்புகள் என்ற விகிதத்தில் இந்தியாவில் தொடர்ந்து குறைவான மரணங்கள் என்ற நிலை நீடிக்கிறது. அதே நேரத்தில் உலக அளவில் பத்து லட்சம் பேருக்கு 148 பேர் மரணம் அடைகின்றனர்.

இலக்குடன் கூடிய கோவிட்-19 சிகிச்சை மேலாண்மை மற்றும் செயல்பாடுகள், பொது சுகாதாரத்தில் நடவடிக்கையில் சீரான தன்மை ஆகிய யுக்திகள் காரணமாக கடந்த பல மாதங்களாக ஊக்கமளிக்கும் வகையில் சாதகமான விளைவுகள் ஏற்பட்டு வருகின்றன.

மொத்த பரிசோதனை எண்ணிக்கையில் முன்னணி வகிக்கும் நாடுகளில் ஒன்றாக இந்தியாவும் இருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் 10,66,786 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. ஒட்டு மொத்த பரிசோதனைகளின் எண்ணிக்கை 10.5 கோடியைத் தாண்டியிருக்கிறது (10,54,87,680).

பரந்த அளவில் தொடர்ச்சியான ஒருங்கிணைந்த பரிசோதனை முறைகள், முன்கூட்டியே தொற்றை கண்டுபிடித்து உரிய நேரத்தில் திறன் வாய்ந்த சிகிச்சைகள் அளிக்க உதவுகிறது. இதன் காரணமாக குணம் பெறுவோர் எண்ணிக்கை அதிகரிப்பதும், குறைந்த அளவு இறப்புகளும் நீடிக்கின்றன. உயிரிழப்போர் விகிதம் தற்போது 1.50% ஆக இந்தியாவில் இருக்கிறது.

புதிதாக பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை என்பது இந்தியாவில் சீராக குறைந்து வரும் போக்கு தொடர்கிறது. பாதிக்கப்பட்டோர் விகிதம் தற்போது வெறும் 7.64 சதவீதமாக இருக்கிறது. நாட்டின் மொத்த பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,10,803 ஆக நீடிக்கும் நிலையில், மொத்த குணம் அடைந்தோர் எண்ணிக்கை 72,59,509 ஆக இருக்கிறது.

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் புதிதாக 43,893 பேருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. புதிதாக குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 58,439 ஆக இருக்கிறது. 10 மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களில் மட்டும் குணமடைந்தோர் விகிதம் 77 சதவீதமாக இருக்கிறது.

மகாராஷ்டிரா, கர்நாடகா மற்றும் கேரளா மாநிலங்களில் ஒரு நாளில் 7000-க்கும் அதிகமானோர் குணம் அடைகின்றனர். 79 சதவீத புதிதாக தொற்றுகளுக்கு உள்ளானவர்கள் 10 மாநிலங்கள்/யூனியன் பிரதேச மாநிலங்களை சேர்ந்தவர்களாக இருக்கின்றனர்.

மகாராஷ்டிராவை விடவும் கேரளாவில் அதிக எண்ணிக்கையில் புதிய பாதிப்புகள் பதிவாகின்றன. இரண்டு மாநிலங்களிலும் தினமும் 5000-க்கும் மேற்பட்டோருக்கு தொற்று உறுதி செய்யப்படுகிறது.

கடந்த 24 மணி நேரத்தில் 508 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் பத்து மாநிலங்கள், யூனியன் பிரதேச மாநிலங்களில் மட்டும் 79 சதவீதம் பேர் உயிரிழந்துள்ளனர். மகாராஷ்டிராவில் அதிகபட்சமாக 115 பேர் உயிரிழந்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x