

தன் தந்தை ராம்விலாஸ் பாஸ்வான் இறந்து ஒருநாள் தான் ஆகிறது, ஆனால் மகன் சிராக் பாஸ்வான் வீடியோ ஷூட் ஒன்றுக்காக அப்பாவின் படத்தின் முன் நின்று ஒத்திகைப் பார்த்த வீடியோ தற்போது சிராக் பாஸ்வானுக்கு கெட்டப் பெயரை ஏற்படுத்தியுள்ளது.
இந்த வீடியோவில் தந்தை இறந்த துக்கம் முற்றிலும் தொலைந்த நிலையில் சிராக் பாஸ்வான் ஜோக்குகளை அடித்தார், எங்கு கட் செய்ய வேண்டும், எங்கு எடிட் செய்ய வேண்டும், சிகை அலங்காரம் எப்படி இருக்க வேண்டும் என்றெல்லாம் பாலிவுட் ஷூட்டிங் பாணியில் பேசிய வீடியோ தற்போது பிஹாரில் சர்ச்சையாகியுள்ளது.
ஆனால் இந்த வீடியோ ஒத்திக்கை வெளியானது குறித்தும் சிராக் பாஸ்வான், நிதிஷ் குமாரை தாக்கிப் பேசினார். இந்த வீடியோ மூலம் என் பெயருக்குக் களங்கம் விளைவிக்க நிதிஷ் குமார் செய்த சதி, இவ்வளவு கீழிறங்குவார் என்று தான் எதிர்பார்க்கவில்லை என்று அவர் சாடினார்.
இந்த 2 நிமிட வீடியோ கிளிப்பில் தன் தலைமுடியை மழித்து தன் தந்தை இறப்புக்கான துக்கத்தை வெளியிடுவது போல் செய்துள்ளார். ராம்விலாஸ் பாஸ்வான் புகைப்படம் முன் வெள்ளை உடையில் நின்று துக்கம் அனுஷ்டிப்பது போல் அவர் போஸ் கொடுத்தார்.
வீடியோவில் அவர் மற்றவர்களிடம் பலருக்கும் பலவிதமான முடி அமைப்பு இருக்கும் என்று அரட்டை மொழி பேசினார். “நீங்கள் கட் மற்றும் எடிட் பகுதியைக் கவனித்துக் கொள்ளுங்கள், நான் நம் வேட்பாளர்கள் பற்றி ஓரிரு வரிகளைச் சேர்ப்பதில் கவனம் செலுத்துகிறேன்” என்றார், மேலும் சிங்கிள் கேமராவா, டபுள் கேமராவா என்றெல்லாம் சிராக் கேட்பதும் பதிவாகியுள்ளது.
இந்த வீடியோவை முன் வைத்து பிஹார் மாநில தகவல் ஒலிபரப்பு அமைச்சர் நீரஜ் குமார் கடும் கிண்டலுடன், ‘நம் பாரம்பரியம் இறந்த பெரியோர்களுக்கு துக்கம் அனுஷ்டிப்பது, ஆனால் இந்தப்புதிய தலைமுறை நடிகர்களைப் பாருங்கள், தந்தை இறந்தவுடன் ஷூட்டிங்கில் பிஸியாகி விடுகின்றனர். பரம்பரை அரசியல், குடும்ப அரசியலின் வெட்கங்கெட்ட தனம், இறந்த தந்தையை வாக்குச் சேகரிக்கப்பயன்படுத்துகிறார், அரசியல் என்பது மக்கள் சேவைக்கானது சிராக், பாலிவுட் திரைப்படம் அல்ல’ என்று சாடினார்.
ஆனால் சிராக் பாஸ்வான் பதிலடி கொடுக்கும்போது, “என் தந்தை இறந்து 6 மணிக்குள் வேட்பாளர்களின் முதல் பட்டியலை நான் வெளியிட வேண்டும். கட்சித் தலைவராக என் கடமையைச் செய்ய வேண்டாமா? 10 நாட்களுக்கு வீட்டை விட்டு வெளியே வரக்கூடாத நிலையில் வீடியோ எடுப்பதைத் தவிர வேறு என்ன வழி இருக்க முடியும்?
என் தந்தையின் மறைவு எனக்கு எவ்வளவு துக்கமாக இருக்கிறது என்பதை நான் நிதிஷ் குமாருக்கு நிரூபிக்க வேண்டுமா என்ன? முதல்வர் இப்படி கீழ்த்தரமாக இறங்குவார் என்று நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை. மக்கள் கவனத்தை திசைத்திருப்பும் அவரது முயற்சி தோல்வியே அடையும்” என்றார் சிராக் பாஸ்வான்.