

பிஹார் சட்டப்பேரவைக்கான தேர்தல், இன்று தொடங்கியுள்ள நிலையில் ''ஜனநாயகத்தின் மாபெரும் விழாவில் வாக்காளர்கள் பங்கேற்க வேண்டும்'' என்று பாஜக தலைவர் ஜே.பி.நட்டா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பிஹார் சட்டமன்றத் தேர்தலின் வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. 243 உறுப்பினர்களைக் கொண்ட பிஹார் சட்டப்பேரவைக்கான தேர்தலுக்கான வாக்குப்பதிவு மூன்று கட்டங்களாக நடைபெறுகிறது.
முதல்கட்டமாக 16 மாவட்டங்களில் தொடங்கப்பட்டுள்ள இன்றைய வாக்குப்பதிவு 71 தொகுதிகளுக்கு நடைபெறுகிறது. மீதமுள்ள இடங்களுக்கு நவம்பர் 3 மற்றும் நவம்பர் 7 ஆகிய தேதிகளில் நடைபெறும்.
இதனை அடுத்து ''ஜனநாயகத்தின் மாபெரும் திருவிழாவில் வாக்காளர்கள் பங்கேற்க வேண்டும்'' என பாஜக தலைவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுகுறித்து ஜே.பி.நட்டா தனது ட்விட்டர் பதிவில் கூறியுள்ளதாவது:
கோவிட் -19 வழிகாட்டுதல்களைக் கடைப்பிடிக்கும் அதே வேளையில், ஜனநாயகத்தின் இந்த மாபெரும் திருவிழாவில் பங்கேற்க வேண்டும். வாக்களிக்கும் உரிமை ஜனநாயகத்தின் மிகப்பெரிய பலம்.
பிஹார் சட்டமன்றத் தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது. கோவிட் தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மனதில் வைத்துக்கொண்டு ஜனநாயகத்தின் மகத்தான திருவிழாவில் பங்கேற்குமாறு நான் மக்களை கேட்டுக்கொள்கிறேன். முதலில் வாக்களிப்போம். பின்னரே உணவு.
இவ்வாறு ஜே.பி.நட்டா தெரிவித்துள்ளார்.