Published : 28 Oct 2020 07:12 AM
Last Updated : 28 Oct 2020 07:12 AM

குஜராத்தில் 2002-ல் நடந்த கலவர வழக்கில் மோடியை சிக்க வைக்காததால் பிரச்சினைகளை சந்தித்தேன்: முன்னாள் சிபிஐ இயக்குநர் ஆர்.கே.ராகவன் குற்றச்சாட்டு

புதுடெல்லி

குஜராத்தில் கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தைத் தொடர்ந்து கடந்த 2002-ம் ஆண்டு கலவரம் ஏற்பட்டது. இது தொடர்பாக உச்ச நீதிமன்ற மேற்பார்வையில் சிறப்பு விசாரணைக் குழு தலைவராக முன்னாள் சிபிஐ இயக்குநர் ஆர்.கே.ராகவன் நியமிக்கப்பட் டார். விசாரணையில் கலவரத்தில் அப்போது குஜராத் முதல்வராக இருந்த மோடிக்குத் தொடர்பு இல்லை என்று அறிக்கை அளிக் கப்பட்டது.

இந்நிலையில், ஆர்.கே.ராகவன் ‘ஒரு சாலையில் சிறப்பான பயணம்’ என்ற தலைப்பில் தனது சுயசரிதையை புத்தகமாக எழுதியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

குஜராத் கலவரத்தில் மோடிக்குதொடர்பு இல்லை என்பதை விசாரணையில் அறிந்து கொண்டேன். 2002-ம் ஆண்டு பிப். 28-ம் தேதி நள்ளிரவு நடந்த கூட்டத்தில் இந்துக்களின் உணர்வுகளில் குறுக்கிட வேண்டாம் என்று போலீஸ் அதிகாரிகளுக்கு மோடிஉத்தரவிட்டதாக போலீஸ் அதிகாரிசஞ்சீவ் பட் கூறியதில் முரண்பாடுகள் இருப்பதைக் கண்டேன். அவரது குற்றச்சாட்டு உறுதிப்படுத்தப்படவில்லை.

கலவரத்தில் மோடிக்கு தொடர்பில்லை என்று நான் அறிக்கை அளித்தற்காக மோடியின் அரசியல் எதிரிகளால் தொல்லைக்கு உள்ளாக்கப்பட்டேன். குற்றச்சாட்டில் மோடியை சிக்க வைக்காததால் நான் மோடிக்கு ஆதரவாக இருப்பதாக எனக்கு எதிராக பொய்யானபுகார்களை கூறி மனுக்களை அனுப்பினர். மத்திய அரசின் (அப்போது காங்கிரஸ் தலைமையிலான அரசு) புலனாய்வு நிறுவனங்களை முறைகேடாகப் பயன்படுத்தி எனது தொலைபேசி உரையாடல்களை ஒட்டுக்கேட்டனர். கலவரம் தொடர்பான குற்றச்சாட்டில் மோடியை சிக்க வைக்கும் அளவுக்கு எதுவும் இல்லாததால் அவர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

கலவரம் தொடர்பாக அப்போது முதல்வராக இருந்த மோடியிடம் விசாரணை நடத்த வேண்டும் என்றும் காந்தி நகரில் உள்ள அலுவலகத்தில் ஆஜராக செய்தி அனுப்பினேன். அதை அவர் ஏற்றுக் கொண்டு சிறப்பு புலனாய்வுக் குழு அலுவலகத்தில் ஆஜரானார். நான் விசாரித்தால் மோடியுடன் பேசி சமரசம் செய்துகொண்டதாக குற்றச்சாட்டுகள் எழும் என்பதால் சிறப்பு விசாரணைக்குழு உறுப்பினரான அசோக் மல்ஹோத்ராவை மோடியை விசாரிக்கச் சொன்னேன்.

விசாரணையின்போது தான் குடிப்பதற்கான தண்ணீரை மோடி கொண்டுவந்தார். 9 மணி நேரம் நடந்த விசாரணையில் ஒரு டீ கூட வேண்டாம் என்று கூறி விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்தார் என்று மல்ஹோத்ரா என்னிடம் கூறினார். இவ்வாறு ஆர்.கே.ராகவன் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x