

நீட் தேர்வில் எந்த கேள்விக்கும் பதில் அளிக்காமல், பொய் வழக்கு போட்ட மாணவிக்கு, ரூ.25,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
மகாராஷ்டிராவின் அம்ராவதி நகரை சேர்ந்த மாணவி வசுந்தரா போஜன். மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வில் இவருக்கு பூஜ்ஜிய மதிப்பெண் கிடைத்தது. இதை எதிர்த்து மும்பை உயர் நீதிமன்ற நாக்பூர் கிளையில் வசுந்தரா வழக்கு தொடர்ந்தார்.
அதில், "பத்தாம் வகுப்பு தேர்வில் 93.4 சதவீத மதிப்பெண்களும் 12-ம் வகுப்பு தேர்வில் 81.85 சதவீத மதிப்பெண்களும் பெற்றுள்ளேன். நீட் தேர்வில் 720-க்கு 600 மதிப்பெண் கிடைக்கும் என்று எதிர்பார்த்திருந்தேன். ஆனால் பூஜ்ஜிய மதிப்பெண் கிடைத்துள்ளது. எனது விடைத்தாளை மறுமதிப்பீடு செய்ய வேண்டும்" என்று கோரியிருந்தார்.
இந்த வழக்கை நீதிபதிகள் அதுல் சந்துர்கர், நிதின் சூரியவன்ஷி அமர்வு விசாரித்தது. இதுதொடர்பாக தேசிய தேர்வு முகமை, மத்திய சுகாதாரத் துறை, கல்வித் துறை உள்ளிட்டவை அக்டோபர் 26-ம் தேதிக்குள் விளக்கம் அளிக்க நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
இதைத் தொடர்ந்து தேசிய தேர்வு முகமை, மாணவி வசுந்தரா போஜனின் விடைத்தாளை உயர் நீதிமன்றத்தில் சமர்ப்பித்தது. அந்த விடைத்தாள், வெற்றுத்தாளாக இருந்தது. எந்த கேள்விக்கும் விடை அளிக்கப்படவில்லை.
இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போதும் மாணவி வசுந்தரா தனது குற்றச்சாட்டில் உறுதியாக இருந்தார். மாணவியின் வழக்கறிஞர் அஸ்வின் தேஷ்பாண்டே அவரிடம் தனியாகப் பேசினார். அதன்பின் வழக்கறிஞர் அஸ்வின் நீதிபதிகளிடம் கூறியபோது, "மாணவி வசுந்தரா நீட் தேர்வில் எந்த கேள்விக்கும் பதில் அளிக்கவில்லை. தனது தவறை மறைக்க பெற்றோர் உட்பட அனைவரிடமும் பொய் கூறியுள்ளார். இப்போதுதான் முதல்முறையாக அவர் உண்மையை ஒப்புக் கொண்டுள்ளார். அவரது சார்பில் நிபந்தனையற்ற மன்னிப்பு கோருகிறேன். வழக்கை வாபஸ் பெற்றுக் கொள்கிறேன்" என்று தெரிவித்தார்.
இதற்கு கடும் கண்டனம் தெரிவித்த நீதிபதிகள், தவறிழைத்த மாணவி வசுந்தராவுக்கு ரூ.25,000 அபராதம் விதித்து உத்தரவிட்டனர்.