Published : 28 Oct 2020 06:09 AM
Last Updated : 28 Oct 2020 06:09 AM

பாதுகாப்பு, மருத்துவம், அஞ்சல் உள்ளிட்ட துறைகளில் இந்தியா - அமெரிக்கா இடையே 5 ஒப்பந்தங்கள் கையெழுத்து: பிரதமர் மோடியுடன் அமெரிக்க அமைச்சர்கள் முக்கிய ஆலோசனை

பாதுகாப்பு, மருத்துவம், அஞ்சல்உள்ளிட்ட துறைகளில் இந்தியா,அமெரிக்கா இடையே 5 முக்கியஒப்பந்தங்கள் நேற்று கையெழுத்தாகின. பிரதமர் மோடியை அமெரிக்க அமைச்சர்கள் சந்தித்து முக்கிய ஆலோசனையும் நடத்தினர்.

அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மைக் பாம்பியோ, பாதுகாப்புத் துறை அமைச்சர் மார்க் எஸ்பர் ஆகியோர் 2 நாள் பயணமாக நேற்று முன்தினம் டெல்லி வந்தனர். முதல் நாளில் அமெரிக்க பாதுகாப்புத் துறை அமைச்சர் மார்க் எஸ்பர், மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்துப் பேசினார்.

இதேபோல அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மைக் பாம்பியோ, மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்து முக்கிய பேச்சுவார்த்தை நடத்தினார்.

அமைச்சர்கள் பேச்சுவார்த்தை

இதன்தொடர்ச்சியாக இரு நாடுகளின் பாதுகாப்பு, வெளியுறவுத் துறை அமைச்சர்கள் டெல்லியில் நேற்று சந்தித்து முக்கிய பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பாதுகாப்பு, மருத்துவம் உள்ளிட்ட துறைகளில் இரு நாடுகளுக்கும் இடையே 5 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இதில் பாதுகாப்புத் துறை சார்ந்த அடிப்படை பரிமாற்றம் மற்றும் ஒத்துழைப்பு ஒப்பந்தம் (பிஇசிஏ) மிகவும் முக்கியமானது.

இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவது தொடர்பாக இரு நாடுகளுக்கு இடையே கடந்த 10 ஆண்டுகளாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த ஒப்பந்தம் மூலம் செயற்கைக்கோள் புகைப்படங்கள், சர்வதேச கடல், வான்வழி போக்குவரத்து குறித்த தகவல்களை இருநாடுகளும் பரஸ்பரம் பகிர்ந்து கொள்ளும். எதிரி நாடுகளின் போர் விமானங்கள், போர்க்கப்பல்கள், படைகளின் நடமாட்டம் குறித்த துல்லியமான விவரங்களை இந்தியா பெற முடியும். இந்த தகவல்களின் மூலம் எதிரி நாடுகளின் இலக்குகளை மிகத் துல்லியமாக தாக்கி அழிக்க முடியும்.

பசிபிக் கடல், இந்திய பெருங்கடலில் சீனாவின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்த அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான், இந்தியாஆகிய 4 நாடுகள் ஓரணியில் திரண்டுள்ளன. குவாட்என்றழைக்கப்படும் இந்தகூட்டணியை வலுப்படுத்தஅமெரிக்கா திட்டமிட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாகபிஇசிஏ ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. மிக நெருங்கிய நட்பு நாடுகளுடன் மட்டுமே அமெரிக்கா இந்த ஒப்பந்தத்தை மேற்கொண்டு வருகிறது. அந்த நட்பு நாடுகளின்பட்டியலில் இந்தியாவும் இணைந்திருக்கிறது.

மேலும், புவி அறிவியல் தொழில்நுட்ப புரிந்துணர்வு ஒப்பந்தம், அணுசக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தம், அஞ்சல் சேவை ஒப்பந்தம், ஆயுர்வேதா - புற்றுநோய் ஆராய்ச்சி ஒத்துழைப்பு ஒப்பந்தம் ஆகியவையும் கையெழுத்தாகின. இந்தியா,அமெரிக்கா இடையே ஒட்டுமொத்தமாக 5 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளன.

இதைத் தொடர்ந்து இந்திய, அமெரிக்க அமைச்சர்கள் கூட்டாக நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியதாவது:

இந்தியா, அமெரிக்கா இடையே பாதுகாப்புத் துறையில் முக்கிய ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. பசிபிக் கடல், இந்திய பெருங்கடல் பகுதிகளில் அமைதியை நிலைநாட்ட இரு நாடுகளும் உறுதி பூண்டுள்ளன.

சர்வதேச சட்டங்களின்படி, சுதந்திரமான கடல் வழி போக்குவரத்தை உறுதி செய்ய இருநாடுகளும் இணைந்து செயல்படும். பஹ்ரைன் நாட்டில் உள்ளஅமெரிக்க கடற்படை தளத்தில் இந்திய பாதுகாப்புத் துறையின் மூத்த அதிகாரி ஒருவர் இடம்பெறுவார். இதேபோல இந்திய பெருங்கடல் தகவல் மையத்தில், அமெரிக்க பாதுகாப்புத் துறை மூத்த அதிகாரி ஒருவர் முக்கிய அங்கம் வகிப்பார்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மைக் பாம்பியோ கூறும்போது, ‘‘கல்வான் பள்ளத்தாக்கு தாக்குதலில் 20 இந்தியவீரர்கள் வீர மரணம் அடைந்தனர். டெல்லியில் உள்ள தேசிய போர்நினைவகத்தில் அந்த வீரர்களுக்குநாங்கள் மரியாதை செலுத்தினோம். இந்தியாவின் இறையாண்மை, சுதந்திரத்தை பாதுகாப்பதில் அமெரிக்கா துணை நிற்கும். சீனா மட்டுமன்றி ஜனநாயகம், சுதந்திரத்துக்கு அச்சுறுத்தலாக உள்ள எந்த சக்திக்கும் எதிராக அமெரிக்காவும் இந்தியாவும் இணைந்து செயல்படும்’’ என்றார்.

பிரதமருடன் சந்திப்பு

இதைத் தொடர்ந்து அமெரிக்க அமைச்சர்கள் மைக் பாம்பியோ, மார்க் எஸ்பர் ஆகியோர் பிரதமர் நரேந்திர மோடியை நேற்று சந்தித்துப் பேசினர். அப்போது பல்வேறு முக்கிய விஷயங்கள் குறித்து ஆலோசனை நடத்தினர்.

அமெரிக்க அமைச்சர்கள் இருவரும் 2 நாள் சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு நேற்று இலங்கை தலைநகர் கொழும்புக்கு புறப்பட்டுச் சென்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x