Published : 28 Oct 2020 06:08 AM
Last Updated : 28 Oct 2020 06:08 AM

பிஹாரில் இன்று முதல்கட்ட தேர்தல்: 71 சட்டப்பேரவைத் தொகுதிகளில் வாக்குப்பதிவு

பிஹார் சட்டப் பேரவைக்கு முதல்கட்டத் தேர்தல் இன்று நடைபெறஉள்ளது. 71 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளதால் பலத்தபோலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

பிஹாரில் 243 பேரவைத் தொகுதிகளுக்கு அக்டோபர் 28,நவம்பர் 3 மற்றும் நவம்பர் 7 ஆகியதேதிகளில் தேர்தல் நடைபெறும் என்று தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவித்தது. மேலும் நவம்பர் 10-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியிடப்படுகின்றன.

இந்நிலையில் முதல்கட்டமாக 71 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு இன்று வாக்குப் பதிவுநடைபெறுகிறது. இத்தொகுதிகளுக்கான பிரச்சாரம் நேற்று முன்தினம் நிறைவு பெற்றது. டைம்ஸ் நவ் - சி வோட்டர் இணைந்து நடத்திய கருத்துக் கணிப்பில், பாஜக-ஐக்கிய ஜனதா தளம் தலைமையிலான கூட்டணி மீண்டும் ஆட்சியை பிடிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வாக்குப்பதிவை முன்னிட்டு பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பதற்றமான, மிகப் பதற்றமான தொகுதிகளில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த 71 தொகுதிகளில் மொத்தம் 1,066 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

வழக்கமாக ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் 1,600 பேர் வாக்களிக்க வசதிகள் செய்யப்படும். ஆனால் தற்போது கரோனா வைரஸ் பிரச்சினை இருப்பதால் இந்த எண்ணிக்கை 1,000-ஆக குறைக்கப்பட்டுள்ளது. மேலும் 80 வயதுக்கு மேற்பட்டவர்கள் தபால் வாக்களிக்கவும் வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் செய்யப்பட்டுள்ளன. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்தல் போன்ற பணிகள் நடந்து முடிந்துள்ளன. மேலும் வாக்குச்சாவடியில் பணிபுரிவோருக்கு முகக்கவசம், தனிநபர் பாதுகாப்பு உடைகள் தரப்படும். வாக்குச்சாவடிக்கு வரும் வாக்காளர்கள் உடல் வெப்பநிலை பரிசோதிக்கப்பட்ட பின்னரே உள்ளே அனுமதிக்கப்படுவர். சானிடைசர், ஹேண்ட்வாஷ் போன்ற திரவங்கள் வைக்கப்பட்டு இருக்கும்.

முதல்கட்ட வாக்குப்பதிவில் 2.14 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். வேட்பாளர்களில் 952 பேர் ஆண்கள், 114 பேர் பெண்கள் போட்டியிடுகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x