

உத்தரப் பிரதேசத்தின் தாத்ரி படுகொலை சம்பவம் தொடர்பாக கருத்து தெரிவித்த மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், நாட்டில் சமூக நல்லிணக்கத்தை சீர்குலைக்க முயற்சி செய்பவர்கள் மீது சாத்தியமான வகையில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்தார்.
டெல்லியில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட அவர் இன்று செய்தியாளர்களிடம் இந்த விவகாரம் குறித்து கூறும்போது, "நாட்டில் சமூக நல்லிணக்கத்தை சீர்குலைக்க முயற்சி செய்பவர்கள் யாராக இந்தாலும், மத்திய அரசோ அல்லது மாநில அரசுகளோ சாத்தியமான வகையில் கடுமையான நடவடிக்கைகளை எடுக்கும்" என்றார்.
முன்னதாக, அவர் நேற்று இதே பிரச்சினை குறித்து கூறும்போது, "தாத்ரி கொலை சம்பவம் துரதிருஷ்டவசமானது. ஒவ்வொரு குடிமகனும் மத நல்லிணக்கத்தைக் கடைபிடிக்க வேண்டும். இது நம் அனைவரின் பொறுப்பு ஆகும்" என்றார்.
இதனிடையே, மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கை ஒன்றில், "தாத்ரி உட்பட நாட்டின் சில பகுதிகளில் நிகழ்ந்த மத ரீதியான மோதல்கள் கவலை அளிப்பதாக உள்ளது. மத ரீதியான உணர்வுகளை புண்படுத்தி நாட்டின் மதச்சார்பற்ற தன்மையை பலவீனப்படுத்த முயற்சி செய்பவர்கள் மீது மாநில அரசுகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என கூறப்பட்டிருந்தது.
தாத்ரி படுகொலை சம்பவம்:
உத்தரப் பிரதேசத்தின் கவுதம புத்தர் மாவட்டம் தாத்ரியை அடுத்துள்ள பிசோதா கிராமத்தில், கடந்த 28-ம் தேதி இரவு பசுவை பலி கொடுத்து அதன் இறைச்சியை முகமது இக்லாக் (58) குடும்பத்தினர் சாப்பிட்டதாக வதந்தி பரவியது. இதைத் தொடர்ந்து 200 பேர் கொண்ட கும்பல் இக்லாக் வீட்டுக்குள் புகுந்து அங்கிருந்தவர்களை தாக்கியது. இதில் இக்லாக் அதே இடத்தில் உயிரிழந்தார். இது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தச் சம்பவம் பற்றியும் இதுதொடர்பாக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை குறித்தும் அறிக்கை தாக்கல் செய்யுமாறு மாநில அரசுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் கடந்த 1-ம் தேதி உத்தரவிட்டிருந்தது.
இதையடுத்து, கடந்த திங்கள்கிழமை இரவு மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு மாநில அரசு அறிக்கை அனுப்பி உள்ளது. தாத்ரி வன்முறை சம்பவம் தொடர்பாக உள்ளூர் காவல் நிலையத்தில் பதிவுசெய்யப்பட்டுள்ள முதல் தகவல் அறிக்கையின் அடிப்படையில் மத்திய அரசுக்கு அறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக உத்தரப் பிரதேச அரசு தரப்பு தெரிவித்தது.
எனினும், இக்லாக் குடும்பத்தினர் மாட்டிறைச்சி சாப்பிட்டதாகவோ, பசு கொல்லப்பட்டதாக வதந்தி பரவியது பற்றியோ அறிக்கையில் குறிப்பிடப்படவில்லை எனத் தெரிகிறது. மேலும், இக்லாக் கொலை செய்யப்படுவதற்கான சூழல் எப்படி ஏற்பட்டது என்பது பற்றிய விவரம் அறிக்கையில் இடம் பெறவில்லை என கூறப்படுகிறது.
முதற்கட்ட விசாரணையின் அடிப்படையில் சிலரை கைது செய்து அவர்களிடம் விசாரணை நடத்தி வருவதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது கவனிக்கத்தக்கது.