Published : 27 Oct 2020 10:35 PM
Last Updated : 27 Oct 2020 10:35 PM

கரோனா கவலையை நீக்குவதில் இசை, நாட்டியத்திற்கு முக்கிய பங்கு: வெங்கய்ய நாயுடு

கோவிட் 19 தொற்றால் ஏற்பட்டுள்ள கவலையை நீக்குவதில் இசையும் நாட்டியமும் முக்கிய பங்கு வகிப்பதாக குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகளுடன் இணைந்து நாட்டிய தரங்கினி நடத்தும் பரம்பரா தொடர் 2020- தேசிய இசை மற்றும் நாட்டியத் திருவிழாவை மெய்நிகர் வாயிலாகத் தொடங்கி வைத்துப் பேசிய குடியரசுத் துணைத் தலைவர், இசையும் நாட்டியமும் நம் வாழ்க்கையில் புத்துணர்ச்சியை ஏற்படுத்துவதாகக் கூறினார்.

கடந்த 23 வருடங்களாக நாட்டிய தரங்கினி அமைப்பு நடத்தி வரும் பரம்பரா தொடரை இந்த வருடம் புதிய உத்திகளுடன் நடத்துவதை பாராட்டிய அவர், பாரம்பரியத்தை ஒரு சந்ததியிடம் இருந்து மற்றொரு சந்ததியருக்கு எடுத்துச் சொல்லும் வகையில் இந்த தலைப்பு அமைந்து இருப்பதாகக் கூறினார்.

பெரும் தொற்றினால் ஏற்பட்டுள்ள பொது முடக்கம், பொருளாதாரப் பின்னடைவு, சமூகத் தொடர்பில் இடைவெளி என்று இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ள தருணத்தில் இந்த இசை மற்றும் நாட்டியத் திருவிழா நடத்தப்படுவது மிக ஏதுவாக அமைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

நமது பாரம்பரிய பொக்கிஷங்களைத் தொடர்ந்து மறு ஆய்வு செய்து அவற்றை புதுப்பிக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார். மேலும் இது குறித்த விஷயங்களை முறையாகக் கற்றுத் தருவதன் மூலம் நிலையான பாரம்பரியத்தை உருவாக்க முடியும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

மேலும் இது போன்ற கலைகளை பள்ளிப் பாடத்திட்டத்தில் கட்டாயமாக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்திய குடியரசுத் துணைத்தலைவர், இதன் வாயிலாக மாணவர்களின் தன்னம்பிக்கையை வளர்ப்பதுடன் அவர்களது கற்பனைத் திறனையும், தனித் திறனையும் கண்டறியவும் முடியும் என்று கூறினார்.

பொது முடக்கத்தினால் கடந்த சில மாதங்களாகத் திரையரங்குகள் மற்றும் திறந்த அரங்குகளில் நடைபெறும் கலை நிகழ்ச்சிகள் பெரிதும் பாதிக்கப்பட்டு இருப்பதை சுட்டிக் காட்டிய வெங்கய்ய நாயுடு, தொழில்நுட்பத்தின் உதவியுடன் புதிய வழிகளைக் கலைஞர்கள் பின்பற்றி பாரம்பரிய கலைகள் அழியாத வகையில் அவற்றைப் பாதுகாக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

தற்போதைய காலத்தில் பொது- தனியார் கூட்டு முயற்சிகள் இன்றியமையாதது என்று தெரிவித்த அவர், கலை, கலாச்சாரம் மற்றும் விளையாட்டுகளை இந்தியாவின் புதிய தலைமுறையினருக்கு எடுத்துச் செல்லும் முயற்சியில் அனைத்துத் துறைகளும் செயல்பட வேண்டும் என்று தொழில்துறைத் தலைவர்களிடம் கோரிக்கை விடுத்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x