

தனது நாட்டின் சுதந்திரத்தையும் இறையாண்மையையும் காப்பதற்காக இந்தியா எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் அமெரிக்கா துணை நிற்கும் என அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ தெரிவித்தார்.
இந்திய மற்றும் அமெரிக்க பாதுகாப்புத்துறை மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் இடையேயான கூட்டம், 2 பிளஸ் 2 என அழைக்கப்படுகிறது. டெல்லியில் நடந்த இந்த கூட்டத்தில் பங்கேற்க அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ, அமெரிக்க பாதுகாப்புத்துறை அமைச்சர் மார்க் எஸ்பர் ஆகியோர் 2 நாள் பயணமாக நேற்று டெல்லி வந்தனர்.
மார்க் எஸ்பர், மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை நேற்று சந்தித்துப் பேசினார். இதில் முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத், ராணுவ தளபதி முகுந்த் நராவனே, விமானப் படைத் தளபதி ராகேஷ் குமார் சிங் பதாரியா, கடற்படைத் தளபதி கரம்பீர் சிங் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.
பாதுகாப்புத் துறை ஒத்துழைப்பு, உளவு தகவல்கள் பரிமாற்றம், இந்தியாவில் தயாரிப்போம் திட்டம் உள்ளிட்டவை குறித்து பேச்சுவார்த்தையில் முக்கியமாக விவாதிக்கப்பட்டது. மேலும் பசிபிக் கடல், இந்தியப் பெருங்கடல் பாதுகாப்பில் இரு நாடுகளும் இணைந்து செயல்படுவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் இடையே பிஇசிஏ என்ற ஒப்பந்தத்தை ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தம் குறித்து இக்கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டது. இதன்படி அமெரிக்காவின் செயற்கைக்கோள் புகைப்படங்களை இந்தியா பயன்படுத்த முடியும். இதன்மூலம் எதிரிகளின் ராணுவ நடமாட்டத்தை இந்தியாவால் துல்லியமாக கண்காணிக்க முடியும். இரண்டாவது நாளாக இந்தக் கூட்டம் இன்று நடைபெற்றது.
இந்தக் கூட்டத்திற்கு பிறகு போர் நினைவுச் சின்னத்திற்கு சென்ற அமெரிக்க அமைச்சர்கள் அங்கு அஞ்சலி செலுத்தினர். பின்னர் மைக் பாம்பியோ செய்தியாளர்களிடம் கூறியதாவது:
கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் சீன வீரர்கள் தாக்குதலில் உயிரிழந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினோம். தனது நாட்டின் சுதந்திரத்தையும் இறையாண்மையையும் காப்பதற்காக இந்தியா எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் அமெரிக்கா துணை நிற்கும். பல முனைகளிலும் இந்தியாவுடன் இணைந்து பணியாற்ற அமெரிக்கா உறுதி பூண்டுள்ளது.’’ எனக் கூறினார்.