Published : 27 Oct 2020 07:18 PM
Last Updated : 27 Oct 2020 07:18 PM

பாதுகாப்பு அம்சங்களில் இந்தியாவும், அமெரிக்காவும் இணைந்து செயல்படும்: 2 பிளஸ் 2 கூட்டத்துக்குப்பின் ராஜ்நாத் சிங் திட்டவட்டம்

பாதுகாப்பு உட்பட இதர பிரிவுகளிலும், இந்தியாவும், அமெரிக்காவும் தொடர்ந்து இணைந்து செயல்படும் என அமெரிக்க அமைச்சர்களின் சந்திப்புக்குப்பின் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறினார்.

இந்திய மற்றும் அமெரிக்க பாதுகாப்புத்துறை மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் இடையேயான கூட்டம், 2 பிளஸ் 2 என அழைக்கப்படுகிறது. டெல்லியில் நடந்த இந்த கூட்டத்தில் பங்கேற்க அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ, அமெரிக்க பாதுகாப்புத்துறை அமைச்சர் மார்க் எஸ்பர் ஆகியோர் வந்திருந்தினர்.

இந்த கூட்டத்துக்குப்பின் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அளித்த பேட்டியில் கூறியதாவது:

கரோனா தொற்று அச்சுறுத்தலுக்கு மத்தியிலும், இந்தியாவுக்கு வந்த அமெரிக்க அமைச்சர்கள் மற்றும் குழுவினருக்கு நன்றி. நமது இரு தரப்பு உறவுக்கு உங்களின் உறுதியை நான் பாராட்டுகிறேன்.

இந்தக் கூட்டத்தில், நாங்கள் இருதரப்பு மற்றும் பலதரப்பு ஒத்துழைப்பு தொடர்பான முக்கிய விஷயங்கள் குறித்து விரிவான ஆலோசனை நடத்தினோம். நாங்கள் சந்திக்கும் முக்கிய சவால்கள் குறித்து ஆலோசித்தோம். பொருளாதாரம் மற்றும் வளர்ச்சியை விரைவாக மீட்பது, கொரோனா தொற்றை தடுப்பது, சர்வதேச விநியோக சங்கிலியை மீண்டும் ஏற்படுத்துவது போன்ற விஷயங்கள் குறித்து நாங்கள் ஆலோசித்தோம்.

அமெரிக்க பாதுகாப்புத்துறை அமைச்சர் டாக்டர் எஸ்பரை நேற்றும் சந்தித்து இருதரப்பு ராணுவ உறவு குறித்து பேசினேன். இன்றும், மண்டல மற்றும் சர்வேதேச அளவிலான விஷயங்கள் குறித்து 2 பிளஸ் 2 கூட்டத்தில் தொடர்ந்து விவாதித்தோம்.

ஜியோ-ஸ்பேசியல் எனப்படும் இருப்பிட தகவல் பகிர்வு மற்றும் ஒத்துழைப்பு குறித்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது மிக முக்கியமானது. தகவல் பரிமாற்றத்துக்காக இந்திய கடல் பகுதி தகவல் மையத்தில் (ஐஎப்சி-ஐஓஆர்) அமெரிக்க அதிகாரியையும், பஹ்ரைனில் உள்ள அமெரிக்க கடற்படை கட்டுப்பாட்டு மையத்தில், இந்திய அதிகாரியையும் பணியமர்த்தும் நடவடிக்கை குறிப்பிடத்தக்கது.

இது தகவல் பரிமாற்ற கட்டமைப்பை மேம்படுத்தும். இருதரப்பு ராணுவ உறவுகள் நன்றாக மேம்பட்டு வருகின்றன. கடல்சார் துறையில் ஒத்துழைப்புடன் செயல்பட வேண்டும் என்ற நமது வேண்டுகோளை அமெரிக்கா ஏற்றுக் கொண்டதை வரவேற்கிறேன். பாதுகாப்பு தொழில் துறையில் ஒத்துழைப்புடன் செயல்படுவது தொடர்பாகவும் நாங்கள் விரிவான ஆலோசனை நடத்தினோம். பாதுகாப்புத்துறையில் தற்சார்பு இந்தியா திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் குறித்தும், இது அமெரிக்க நிறுவனங்களின் விநியோக சங்கிலியிலும், பயனுள்ளதாக இருக்கும் எனவும் நான் எடுத்துரைத்தேன்.

கடந்த சில ஆண்டுகளாக நடந்து வரும் எங்கள் பேச்சுவார்த்தையில், பாதுகாப்பு துறையில் புதுமை குறித்து தொடர்ந்து ஆலோசித்து வருகிறோம்.

எங்கள் சந்திப்பில் இந்தோ- பசிபிக் பாதுகாப்பு குறித்தும் நாங்கள் பேசினோம். இப்பகுதியில் அனைத்து நாடுகளின் அமைதி, நிலைத்தன்மை, செழிப்பு ஆகியவை நிலவ வேண்டும் என நாங்கள் உறுதியுடன் கூறினோம். சர்வதேச விதிமுறைகள், கடற் வழி சட்டம் மற்றும் சுதந்திரத்தை மதிப்பது, அனைத்து நாடுகளின் இறையாண்மையை மதிப்பதன் அவசியம் குறித்தும் நாங்கள் பேசினோம். இந்தியா-அமெரிக்கா உட்பட சில நாடுகளுடனான ‘மலபார்’ கடற்படை கூட்டு பயிற்சியில் ஆஸ்திரேலியாவும் இணைவதை இரு நாடுகளும் வரவேற்றோம்.

இந்த சந்திப்பில் நாங்கள் ஆக்கப்பூர்வ பேச்சுவார்த்தை நடத்தினோம். பாதுகாப்பு மற்றும் இதர பிரிவுகளில் இந்தியாவும், அமெரிக்காவும் தொடர்ந்து இணைந்து செயல்படும்.

இவ்வாறு மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x