Published : 27 Oct 2020 05:06 PM
Last Updated : 27 Oct 2020 05:06 PM

தெருவோர வியாபாரிகளுக்கு பிணையின்றி கடன்; சுதந்திரத்துக்குப் பின்னர் முதல் முறை: பிரதமர் மோடி பெருமிதம்

புதுடெல்லி

சுதந்திரத்துக்குப் பின்னர் முதல் முறையாக தெருவோர வியாபாரிகள், உத்தரவாதம், பிணை ஏதுமின்றி கடன் பெற்று வருகின்றனர் என பிரதமர் தெரிவித்தார்.

உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த பிரதமர் ஸ்வநிதி திட்டப் பயனாளிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி காணொலிக் காட்சி மூலம் கலந்துரையாடினார்.

பயனாளிகளுடன் பிரதமர் கலந்துரையாடிய போது, டிஜிடல் பரிவர்த்தனையின் பயன்கள் குறித்து, அவர்களுக்கு ஆலோசனை வழங்கினார். பணப்பயன்களை எவ்வாறு திரும்பப் பெறுவது என்பது பற்றியும் அவர் விளக்கினார். இந்தப் பணத்தைக் கொண்டு ஒருவர் முறையான கல்வி பெறவும், தனது சிறந்த வாழ்க்கைத் தொழிலை வகுத்துக் கொள்ளவும் முடியும் என்று அவர் குறிப்பிட்டார்.

பின்னர் தமது உரையில், முன்பெல்லாம் மாத ஊதியம் பெறுபவர்கள் கூட கடனுக்காக வங்கிகளை அணுக முடியாத நிலை இருந்ததாகவும், ஏழை மக்களும், தெருவோர வியாபாரிகளும் வங்கிகளை அணுகுவதை எண்ணிக்கூட பார்க்க முடியாது என்றும் பிரதமர் கூறினார்.

ஆனால் இப்போது, மக்கள் தங்கள் தொழிலைத் தொடங்குவதற்கு கடன் வழங்க அவர்களது வீடு தேடி வங்கிகள் வருவதாக அவர் தெரிவித்தார்.

பயனாளிகளுக்கு வாழ்த்து தெரிவித்த பிரதமர், வங்கியாளர்களின் முயற்சிகளைப் பாராட்டினார். இந்த முயற்சிகள், ஏழை மக்கள் தங்கள் பண்டிகைகளைக் கொண்டாட உதவும் என்று அவர் தெரிவித்தார். தற்சார்பு இந்தியா திட்டத்துக்கு இந்த நாள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்று கூறிய அவர், இந்த நாள் தெரு வியாபாரிகளைப் பெருமைப்படுத்தும் நாள் என்று குறிப்பிட்டார்.

தன்னிறைவு இந்தியாவை நோக்கிய அவர்களின் பங்களிப்பை நாடு அங்கீகரித்துள்ளது என்று அவர் கூறினார். கரோனா தொற்று பரவிய நிலையில், தொழிலாளர்கள் எவ்வாறு இதைச் சமாளிப்பார்கள் என்று மற்ற நாடுகள் கவலைப்பட்ட போது, எந்த சவாலையும் எதிர்த்து முறியடித்து வெற்றி பெற முடியும் என்று நமது தொழிலாளர்கள் நிரூபித்ததாக அவர் கூறினார்.

பெருந்தொற்று காலத்தில் ஏழை மக்களின் பாதிப்பைக் குறைக்கும் வகையில், கரீப் கல்யாண் யோஜனா என்னும் ஒரு லட்சத்து 70 ஆயிரம் கோடி ரூபாய் தொகுப்புத் திட்டத்தை அரசு தொடங்கியதை அவர் சுட்டிக்காட்டினார். ரூ.20 லட்சம் கோடி பொருளாதார ஊக்குவிப்புத் திட்டமும் ஏழைகளைக் கவனத்தில் கொண்டே அறிவிக்கப்பட்டதாக அவர் கூறினார்.

தெருவோர வியாபாரிகள் தங்கள் தொழிலை மீண்டும் தொடங்கி, தன்னிறைவு பெற முடியும் என்பது தமக்கு மகிழ்ச்சி அளிப்பதாக அவர் தெரவித்தார்.

நாடு முழுவதும் இந்தத் திட்டம் வேகமாக நடைமுறைப்படுத்தப்படுவது குறித்து நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்தார். ஸ்வநிதி திட்டத்தின் கீழ் கடன் பெறுவதற்கு யாரும் உத்தரவாதம் அளிக்கத் தேவையில்லை என பிரதமர் கூறினார். கடன் பெற விரும்புவர், ஆன்லைன் வாயிலாக பொது சேவை மையம் அல்லது நகராட்சி அலுவலகம் அல்லது வங்கிக்குச் சென்று விண்ணப்பத்தை பதிவேற்றம் செய்யலாம் .

சுதந்திரத்துக்குப் பின்னர் முதல் முறையாக தெருவோர வியாபாரிகள், உத்தரவாதம், பிணை ஏதுமின்றி கடன் பெற்று வருகின்றனர் என பிரதமர் தெரிவித்தார். அதிக அளவில் நகர்ப்புற தெரு வியாபாரிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வந்த மாநிலம் உத்தரப்பிரதேசம் ஆகும். இந்தத் திட்டத்தின் கீழ், நாடு முழுவதும் பெறப்பட்ட 25 லட்சம் கடன் விண்ணப்பங்களில், 6.5 லட்சத்துக்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் உ.பி.யில் இருந்து மட்டும் வந்துள்ளதாக அவர் தெரிவித்தார். அந்த 6.5 லட்சம் விண்ணப்பங்களில், 4.25 லட்சம் விண்ணப்பங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. உ.பி.யில் ஸ்வநிதி திட்ட கடன் ஒப்பந்தத்துக்கு முத்திரைத் தீர்வையிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

பெருந்தொற்று காலத்தில், 6 லட்சம் தெரு வியாபாரிகளுக்கு ரூ.1000 நிதியுதவி வழங்கியதற்காக உ.பி.அரசுக்கு பிரதமர் நன்றி தெரிவித்தார்.

இந்த திட்டத்தின் கீழ், கடன் வழங்கப்பட்ட தெருவோர வியாபாரிகளில் பெரும்பாலோனர் சரியான நேரத்தில் தங்கள் கடனைத் திருப்பிச் செலுத்தி வருகின்றனர் எனக்கூறிய அவர், சிறு கடன் பெறுவோர் தங்கள் நேர்மையிலும் உண்மைத்தன்மையிலும் சமரசம் செய்து கொள்ளமாட்டார்கள் என்பதை நிரூபித்துள்ளனர் எனத் தெரிவித்தார்.

இந்தத் திட்டம் குறித்து இயன்றவரை அதிகமான நபர்களிடம் விழிப்புணர்வைப் பரப்ப வேண்டியதன் அவசியத்தை பிரதமர் வலியுறுத்தினார். இந்தத் திட்டத்தின் கீழ், உரிய நேரத்தில் முறையாக தவணையை திருப்பிச் செலுத்துபவர்களுக்கு 7 சதவீத வட்டி தள்ளுபடி உள்ளது என்றும், டிஜிடல் பரிவர்த்தனைகளுக்கு மாதத்திற்கு ரூ.100 வீதம் பணப்பயன் வசதியும் உள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

ஜன் தன் கணக்குகளின் செயல்திறன் பற்றி சிலர் சந்தேகப்பட்டதாக பிரதமர் குறிப்பிட்டார். ஆனால், அந்த வங்கி கணக்குகள் நெருக்கடியான காலத்தில் ஏழைகளுக்கு உதவி வருவதை அவர் சுட்டிக்காட்டினார்.

ஏழைகளின் நலனுக்காக அரசு மேற்கொண்ட முன்முயற்சிகளை அவர் பட்டியலிட்டார்.

இந்த நிகழ்ச்சியையொட்டி, தெரு வியாபாரிகள், தொழிலாளர்கள், விவசாயிகள் ஆகியோர் தங்கள் தொழிலைத் தொடங்கி நடத்தி வாழ்க்கையை முன்னேற்றிக் கொள்ள அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்று பிரதமர் உறுதியளித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x