

உத்தரப் பிரதேச மாநிலம், ஹாத்ரஸில் பட்டிலியனத்தைச் சேர்ந்த 19 வயதுப் பெண் கூட்டுப் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட வழக்கில், அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் கண்காணிப்பில் சிபிஐ விசாரணை நடைபெறும் என்று உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது.
உத்தரப் பிரதேச மாநிலம் ஹாத்ரஸ் மாவட்டத்தைச் சேர்ந்த 19 வயது தலித் பெண் 4 பேர் கொண்ட கும்பலால் கடந்த மாதம் 14-ம் தேதி கூட்டுப் பலாத்காரம் செய்யப்பட்டார். அந்தப் பெண் சிகிச்சைக்காக டெல்லி சப்தார் ஜங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார்.
இதையடுத்து, அந்தப் பெண்ணின் உடலை வலுக்கட்டாயமாக ஹாத்ரஸுக்கு இரவோடு இரவாகக் கொண்டுவந்து போலீஸார் தகனம் செய்தனர்.
இந்த வழக்கை சிபிஐ மூலம் விசாரிக்க உத்தரவிட வேண்டும், சாட்சியங்களையும், பாதிக்கப்பட்ட குடும்பத்தினரையும் பாதுகாக்க வேண்டும், விசாரணையை வேறு மாநிலத்துக்கு மாற்ற வேண்டும் எனக் கோரி சமூக ஆர்வலர்கள், வழக்கறிஞர்கள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த மனுக்கள் மீதான விசாரணை உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே, நீதிபதிகள் ஏ.எஸ். போபன்னா, வி.ராமசுப்பிரமணியன் ஆகியோர் கொண்ட அமர்வில் விசாரிக்கப்பட்டது.
கடந்த 15-ம் தேதி விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், “ பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயர், விவரங்கள், குடும்ப விவரங்கள் வெளியே வரக்கூடாது. அந்தப் பெண்ணின் குடும்பத்தினருக்கு முழுப் பாதுகாப்பு வழங்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.
பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் சீமா குஷ்வாலா, “வழக்கின் விசாரணை உத்தரப் பிரதேசத்தில் நடந்தால் நியாயமாக இருக்காது. வேறு மாநிலத்தில் விசாரணை நடத்தப்பட வேண்டும் அல்லது டெல்லியில் நடத்தப்பட வேண்டும். சிபிஐ தனது விசாரணயை அறிக்கையை நேரடியாக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும்” எனத் தெரிவித்தார்.
உ.பி. அரசு சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, “பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு அளிக்கப்பட்டு வரும் பாதுகாப்பு குறித்தும், சாட்சியங்களுக்கு அளிக்கப்பட்ட பாதுகாப்பு குறித்தும் உ.பி. அரசு பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துவிட்டது. விசாரணையையும் சிபிஐக்கு மாற்றிவிட்டது.
அந்த விசாரணையையும் உச்ச நீதிமன்றம் கண்காணிக்க வேண்டும் என்று மாநில அரசும் கோரியுள்ளது. தேவைப்பட்டால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு அரசு சார்பில் வழக்கறிஞர் ஏற்பாடு செய்யவும் உதவி செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விசாரணையில் மாநில அரசு எந்தப் பாகுபாடும் பார்க்காது” எனத் தெரிவித்தார்.
அனைத்துத் தரப்பு வாதங்களையும் கேட்ட தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே அமர்வு, கடந்த 15-ம் தேதி எந்த உத்தரவும் பிறப்பிக்காமல் ஒத்திவைத்தது.
இந்நிலையில், தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே, நீதிபதிகள் ஏ.எஸ். போபன்னா, வி.ராமசுப்பிரமணியன் ஆகியோர் கொண்ட அமர்வு இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்தது.
''ஹாத்ரஸ் மாவட்டத்தில் 19 வயதுப் பெண் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட வழக்கில் சிபிஐ நடத்தும் விசாரணையை அலகாபாத் உயர் நீதிமன்றம் கண்காணிக்கும். வழக்கைக் கண்காணித்தல், பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தாருக்குப் பாதுகாப்பு வழங்குதல், சாட்சியங்களுக்குப் பாதுகாப்பு வழங்குதல் அனைத்தையும் உயர் நீதிமன்றமே முடிவு செய்யும்.
சிபிஐ விசாரணை முடிந்தபின், அதன்பின் இந்த வழக்கை வேறு மாநிலத்துக்கு மாற்றுவதா என்பது குறித்து முடிவு செய்யப்படும். இந்த வழக்கில் அவ்வப்போது நிலவரங்களை, அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் சிபிஐ தாக்கல் செய்ய வேண்டும்.
இந்த வழக்கில் கொல்லப்பட்ட பெண்ணின் பெயர் வெளிவரக்கூடாது. அந்தப் பெண்ணின் உண்மையான பெயரை அழித்துவிட வேண்டும் எனும் உ.பி. அரசின் கோரிக்கையைப் பரிசிலீக்கிறோம்''.
இவ்வாறு தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டது.