3 மாதங்களுக்குப் பின் கரோனா தொற்று 40 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்தது: குணமடைந்தோர் 90 சதவீதமாக உயர்வு

கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

கடந்த 3 மாதங்களுக்குப் பின் நாள்தோறும் கணக்கிடப்படும் கரோனா வைரஸ் தொற்று 40 ஆயிரத்துக்கும் கீழ் முதல் முறையாகக் குறைந்தது. குணமடைந்தோர் சதவீதம் 90 சதவீதத்துக்கும் மேல் உயர்ந்துள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 36 ஆயிரத்து 470 பேர் கரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். இதன் மூலம் ஒட்டுமொத்த பாதிப்பு 79 லட்சத்து 46 ஆயிரத்து 429 ஆக அதிகரித்துள்ளது. 3 மாதங்களுக்குப் பின் நாள்தோறும் புதிதாக நோய்த்தொற்றுக்கு ஆளாகுபவர்கள் எண்ணிக்கை முதல் முறையாக 40 ஆயிரத்துக்கும் கீழ் சரிந்துள்ளது.

இதில் நம்பிக்கை அளிக்கும் வகையில் கரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 72 லட்சத்து ஆயிரத்து 70 ஆக உயர்ந்துள்ளது. குணமடைந்தோர் சதவீதம் 90.62 ஆக உயர்ந்துள்ளது.

கரோனாவில் தற்போது சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 6 லட்சத்து 25 ஆயிரத்து 857 ஆகக் குறைந்துள்ளது. ஒட்டுமொத்த பாதிப்பில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 7.88 சதவீதமாகக் குறைந்துள்ளது.

தொடர்ந்து 5-வது நாளாக கரோனா வைரஸால் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 7 லட்சத்துக்கும் கீழ் குறைந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் கரோனா வைரஸால் 488 பேர் உயிரிழந்தனர். ஒட்டுமொத்த உயிரிழப்பு ஒரு லட்சத்து 19 ஆயிரத்து 502 ஆக அதிகரித்துள்ளது. கரோனாவில் உயிரிழப்பு 1.50 சதவீதமாகக் குறைந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 84 பேரும், கர்நாடகாவில் 42 பேரும், மேற்கு வங்கத்தில் 59 பேரும், தமிழகத்தில் 32 பேரும், டெல்லியில் 54 பேரும், சத்தீஸ்கரில் 43 பேரும் உயிரிழந்தனர்.

ஐசிஎம்ஆர் அறிக்கையின்படி, இதுவரை நாட்டில் 10 கோடியே 44 லட்சத்து 20 ஆயிரத்து 894 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன. இதில் நேற்று மட்டும் 9 லட்சத்து 58 ஆயிரத்து 116 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன.

இவ்வாறு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in