

உத்தரப்பிரதேசத்தின் தாத்ரியில் நடந்தது மிக சிறிய சம்பவம் தான் என்று பாஜக எம்.பி. சத்யபால் சிங் கூறியுள்ளார். அவரது கருத்துக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
உத்தரப்பிரதேச மாநிலம், பாக்பட் மக்களவைத் தொகுதி உறுப்பினரான சத்யபால் சிங் இது தொடர்பாக கூறும்போது, "தாத்ரியில் நடந்தது மிகச் சிறிய சம்பவம். இதுபோன்ற சம்பவங்களை கையாள்வதற்கு நமது ஜனநாயக அமைப்பு முழு அதிகாரம் வழங்கியுள்ளது.
முஸ்லிம்களின் நிலைமையை மட்டுமல்லாமல் மற்ற மதத்தினரின் நிலைமையையும் அரசு கருத்தில் கொள்ள வேண்டியுள்ளது." என்றார்.
இவரது இந்தக் கருத்து குறித்து காங்கிரஸ் கட்சியின் செய்தித்தொடர்பாளர் அஜய் குமார் கூறும்போது, “தாத்ரி சம்பவம் தொடர்பாக பாஜக எம்பி சத்யபால் சிங் கூறியுள்ள கருத்து அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது. மத ரீதியாக மோதலை ஏற்படுத்தி அதிகாரத்தை கைப்பற்ற வேண்டும் என்ற பாஜகவின் வியூகத்தை பிரதிபலிப்பதாக இவரது கருத்து அமைந்துள்ளது” என்றார்.
சமாஜ்வாதி கட்சியின் மூத்த தலைவர் ராஜிவ் ராய் கூறும்போது, “மும்பை மாநகர முன்னாள் காவல் அணையரான சத்யபால் சிங், தாத்ரி சம்பவத்தை சிறியது என கூறியிருப்பது கண்டிக்கத்தக்கது. உ.பி.யில் சட்டப்பேரவைத் தேர்தல் வர (2017) உள்ள நிலையில், மத ரீதியாக மக்கள் மத்தியில் பிளவை ஏற்படுத்த பாஜக முயற்சிக்கிறது. அவர் மன்னிப்பு கேட்க வேண்டும்” என்றார்.
உத்தரப் பிரதேச மாநிலம் தாத்ரியை அடுத்த பிசோதா கிராமத்தில் கடந்த மாதம் 28-ம் தேதி இரவு மாட்டிறைச்சி சாப்பிட்டதாகக் கூறி முகமது இக்லாக் குடும்பத்தினர் மீது 200 பேர் கொண்ட கும்பல் தாக்குதல் நடத்தியது. இதில், இக்லாக் பலியானார் என்பது குறிப்பிடத்தக்கது. இது நாடு முழுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.