

பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் மரண விவகாரத்தில் நடிகை கங்கனாவுக்கும் மகராஷ்டிர அரசுக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது.
இந்நிலையில், மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் நேற்று நடைபெற்ற தசரா நிகழ்ச்சியில் முதல்வர் உத்தவ் தாக்கரே பேசும்போது, “வயிற்று பிழைப்புக்காக மகாராஷ்டிரா வந்தவர்கள் எல்லாம், இன்று நம் மாநிலத்தை இழிவுபடுத்துகின்றனர்” என்றார். நடிகை கங்கனாவை மறைமுகமாக இவ்வாறு கூறியதாக பரவலாக பேசப்பட்டது.
இதற்கு பதில் அளிக்கும் விதமாக, தனது ட்விட்டர் பக்கத்தில் கங்கனா ரனாவத், "உணவுக்கு வழி இல்லாமல், நான் மும்பையில் தஞ்சம் புகுந்திருப்பதாக முதல்வர் உத்தவ் தாக்கரே பேசியிருக்கிறார். உங்கள் மகன் வயதில் இருக்கும் ஒரு பெண்ணிடம் எப்படி பேச வேண்டும் என்று கூட உங்களுக்கு தெரியவில்லை. குடும்ப அரசியலின் மோசமான வாரிசாக நீங்கள் இருக்கிறீர்கள். நான் அப்படி கிடையாது. உங்களைப் போல எனது தந்தையின் பெயரை பயன்படுத்தி நான் முன்னுக்கு வரவில்லை. அவர்களின் சொத்தில் நான் வாழ நினைக்கவில்லை. என்ன செய்வது, சிலருக்கு மட்டும்தான் இதுபோன்று சுயமரியாதை உணர்வு இருக்கும்" என பதிவிட்டுள்ளார்.