Published : 27 Oct 2020 07:22 AM
Last Updated : 27 Oct 2020 07:22 AM

அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத்துடன் பேச்சுவார்த்தை: இன்று முக்கிய ஒப்பந்தம் கையெழுத்தாகிறது

இந்திய, அமெரிக்க வெளியுறவு, பாதுகாப்புத் துறை அமைச்சர்கள் டெல்லியில் நேற்று முக்கிய பேச்சுவார்த்தை நடத்தினர். பாதுகாப்புத் துறை தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையே இன்று

முக்கிய ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் பாம்பியோ, அந்நாட்டு பாதுகாப்புத் துறை அமைச்சர் மார்க் எஸ்பர் ஆகியோர் 2 நாள் பயணமாக நேற்று டெல்லி வந்தனர். இந்நிலையில், மார்க் எஸ்பர், மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை நேற்று சந்தித்துப் பேசினார். இதில் முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத், ராணுவ தளபதி முகுந்த் நராவனே, விமானப் படைத் தளபதி ராகேஷ் குமார் சிங் பதாரியா, கடற்படைத் தளபதி கரம்பீர் சிங் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.

பாதுகாப்புத் துறை ஒத்துழைப்பு, உளவு தகவல்கள் பரிமாற்றம், இந்தியாவில் தயாரிப்போம் திட்டம் உள்ளிட்டவை குறித்து பேச்சுவார்த்தையில் முக்கியமாக விவாதிக்கப்பட்டது. மேலும் பசிபிக் கடல், இந்தியப் பெருங்கடல் பாதுகாப்பில் இரு நாடுகளும் இணைந்து செயல்படுவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

பிஇசிஏ ஒப்பந்தம்

அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் இடையே பிஇசிஏ என்ற ஒப்பந்தத்தை ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தம் குறித்து இக்கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டது. இதன்படி அமெரிக்காவின் செயற்கைக்கோள் புகைப்படங்களை இந்தியா பயன்படுத்த முடியும். இதன்மூலம் எதிரிகளின் ராணுவ நடமாட்டத்தை இந்தியாவால் துல்லியமாக கண்காணிக்க முடியும்.

அமெரிக்க பாதுகாப்புத் துறை அமைச்சர் மார்க் எஸ்பர், வெளியுறவு அமைச்சர் மைக் பாம்பியோ ஆகியோர் இன்று பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துப் பேச உள்ளனர். அப்போது பிஇசிஏ ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இகூட்டத்தில் அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசும்போது, "இருதரப்பு பேச்சுவார்த்தை பயனுள்ளதாக இருந்தது. இதன்மூலம் இருநாடுகளின் பாதுகாப்பு உறவு மேலும் வலுவடைந்துள்ளது" என்று தெரிவித்தார்.

வெளியுறவு அமைச்சர்கள்..

அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் பாம்பியோ, மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரை நேற்று சந்தித்துப் பேசினார்.

கடந்த 3 வாரங்களுக்கு முன்பு ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்ற குவாட் நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் மாநாட்டில் இருவரும் சந்தித்துப் பேசினர். அப்போது பசிபிக் கடல், இந்திய பெருங்கடலில் சீனாவின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்துவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதன் தொடர்ச்சியாக நேற்றைய பேச்சுவார்த்தை அமைந்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x