Published : 27 Oct 2020 06:14 AM
Last Updated : 27 Oct 2020 06:14 AM

தேர்தலில் பாஜக அதிக இடங்களை கைப்பற்றும்; பிஹாரில் மீண்டும் தே.ஜ. கூட்டணி ஆட்சி: ஏபிபி-சிவோட்டர் கருத்துக்கணிப்பு

பிஹாரில் தற்போது நிதிஷ் குமார் தலைமையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி நடைபெறுகிறது. சட்டப் பேரவை காலம் முடியவுள்ளதைத் தொடர்ந்து வரும் 28, நவம்பர் 3, 7 ஆகிய தேதிகளில் 3 கட்டமாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. பாஜக - ஐக்கிய ஜனதா தளக் கட்சிகள் தலைமையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி மீண்டும் பிஹார் தேர்தல் களத்தில் இறங்கியுள்ளது. அதைப் போலவே தேஜஸ்வி யாதவ் தலைமையில் ராஷ்டிரிய ஜனதா தளம் - காங்கிரஸ் கட்சி தலைமையில் மேலும் சில கட்சிகள் இணைந்து மெகா கூட்டணி அமைத்து தேர்தலைச் சந்திக்கின்றன.

இந்நிலையில் தேர்தலில் பிஹாரில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியைப் பிடிக்கும் என்று ஏபிபி-சிவோட்டர் கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் கருத்துக் கணிப்பின்படி மொத்தமுள்ள 243 தொகுதிகளில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 135 முதல் 159 இடங்கள், காங்கிரஸ் கூட்டணி 77 முதல் 98 இடங்களைக் கைப்பற்றும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சிராக் பாஸ்வான் தலைமையிலான லோக் ஜனசக்தி கட்சிக்கு (எல்ஜேபி) வெறும் 5 இடங்கள் மட்டுமே கிடைக்கும் என்று கருத்துக் கணிப்பு கூறுகிறது.

தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு 43 சதவீத வாக்குகளும், காங்கிரஸ் தலைமையிலான மெகா கூட்டணிக்கு 35 சதவீத வாக்குகளும், எல்ஜேபிக்கு 4 சதவீத வாக்குகளும், இதர கட்சிகளுக்கு 18 சதவீத வாக்குகளும் கிடைக்கும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தேர்தலில் பாஜக 73 முதல் 81 இடங்கள் வரை வெல்லக் கூடும் என்று கூறப்பட்டுள்ளது. நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளக் கட்சிக்கு 59 முதல் 67 இடங்கள் வரை கிடைக்க கூடும். விகாஸ்ஷீல் இன்சான் கட்சிக்கு 3 முதல் 7 இடங்களும் இந்துஸ்தானி அவாம் மோர்ச்சா கட்சிக்கு 0 முதல் 4 இடங்களும், ராஷ்டிரிய ஜனதா தளத்துக்கு 56 முதல் 64 இடங்களும், காங்கிரஸுக்கு 12 முதல் 20 இடங்களும், இடதுசாரிகளுக்கு 9 முதல் 14 இடங்களும் கிடைக்கும் என கருத்துக் கணிப்பு தெரிவிக்கிறது.

பிஹாருக்கு முதல்வராக யார் வரவேண்டும் என்ற கேள்விக்கு கருத்துக்கணிப்பில் நிதிஷ் குமார்தான் முதல்வராக வரவேண்டும் என்று 30 சதவீதம் பேர் கருத்து தெரிவித்தனர். தேஜஸ்வி யாதவுக்கு 20 சதவீதம் பேரும், சிராக் பாஸ்வானுக்கு 14 சதவீதம் பேரும், சுஷில் மோடிக்கு 10 சதவீதம் பேரும் வாக்குகளை அளித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x