மகாதலித் என்ற பெயரைத்தான் கொடுத்தார் நிதிஷ்.. வேறு என்ன எங்களுக்குக் கொடுத்தார்? : பரிதாபத்திலும் பரிதாப நிலையில் மகாதலித்துகள் 

மகாதலித் என்ற பெயரைத்தான் கொடுத்தார் நிதிஷ்.. வேறு என்ன எங்களுக்குக் கொடுத்தார்? : பரிதாபத்திலும் பரிதாப நிலையில் மகாதலித்துகள் 
Updated on
2 min read

பிஹார் சட்ட மன்ற தேர்தல் வெற்றியை பாஜக-நிதிஷ் கூட்டணி ஒரு தலையாயனதாக, இன்றியமையாததாக பார்க்கும் வேளையில் அங்குள்ள மகாதலித் என்ற ஒரு பெரும்பிரிவைச் சேர்ந்த ரிஷிதேவ் உட்பட 21 உட்சாதிகளும் ‘யார் ஆட்சிக்கு வந்தால் என்ன? எங்களுக்கு எந்த மாற்றமும் ஏற்படாது’ என்று நிதிஷ் குமார் உள்ளிட்டோர் மிது கடும் அதிருப்தியில் உள்ளனர்.

மகாதலித் என்ற பிரிவை 2007-ல் உருவாக்கியவர் ஐக்கிய ஜனதாதளத் தலைவர் நிதிஷ் குமார், இதன் மூலம் ஆழமாக சாதிப்பிரிவினை வேரூன்றிய பிஹாரில் தனக்கென ஒரு தகுதியை அவர் ஏற்படுத்திக் கொண்டார். இந்தக் குழுவின் ஒரு தனித்த தலைவராக நிதிஷ் குமாரையே அவர்கள் நம்பி ஆதரவளித்தனர்.

மகாதலித்துகளில் 21 பிரிவினர் ஒன்றிணைந்துள்ளனர். 13 ஆண்டுகள் ஆகிவிட்டது, ஆனால் இவர்கள் வாழ்வாதாரம் நிலையில் முன்னேற்றம் இல்லை. ’எங்களுக்கு மகாதலித் என்ற அடையாளம் கிடைத்தது சரி, எங்களுக்கு வேறு என்ன கிடைத்தது?’ என்று இந்த சமுதாயத்தினர் நிதிஷுக்கு எதிராகக் கேள்வி எழுப்பத் தொடங்கினர்.

2ம் முறை நிதிஷைத் தேர்வு செய்த போது எங்களுக்கு 1,306 சதுர அடி நிலம் தருவதாக வாக்குறுதி அளித்தார். ஆனால் இன்று எங்களிடம் இறந்தோரைப் புதைக்கக் கூட நிலம் இல்லை. இரவில் யாருக்கும் தெரியாமல் நாங்கள் புதைக்க வேண்டியுள்ளது என்று தி இந்து ஆங்கிலம் நாளிதழ் நிருபரிடம் மகாதலித்துகள் கும்பலாகக் கேட்டனர்.

பிஹாரில் வேலை இல்லாததால் இளைஞர்கள் பஞ்சாபில் வயல்வெளிகளில் வேலை செய்ய போய்விட்டனர். கரோனா லாக் டவுனின் போது ஊர் திரும்பிய இவர்கள் மீண்டு பஞ்சாபுக்கே பணியாற்ற சென்று விட்டனர், காரணம் வேலையில்லை. லாக்டவுனுக்குப் பிறகு பஞ்சாபுக்கு பேருந்தில் செல்ல கட்டணம் ரூ.3,000 ஆகும். இதற்கு 10 வட்டிக்குக் கடன் வாங்கிச் சென்றிருக்கிறார்கள். ’இங்கு தொழிற்சாலை கட்டியிருந்தால் நாங்கள் ஏன் பஞ்சாபுக்குப் போக வேண்டும்?’என்பதாகவே இவர்கள் கேள்வி உள்ளது.

அன்று மோடி தேர்தல் பிரச்சாரத்தில் நிதிஷ் குமார் பாஜக கூட்டணிதான் வளர்ச்சியின் பாதை என்று கூறினார். நிதிஷ் குமார் வந்த பிறகுதான் பிஹார் வளர்ச்சிப்பாதையில் செல்கிறது என்றார், ஆனால் மகாதலித்துகள் கூற்றோ அதற்கு நேர்மாறாக உள்ளது.

பெண்கள் சிலர் கூட்டமாக தி இந்து ஆங்கிலம் நிருபரிடம் கோரஸாகக் கூறிய போது, “எங்களுக்கு பள்ளி இல்லை, பஞ்சாயத்து பவன் இல்லை, ரேஷன் அட்டைகள் இல்லை, சாலைகள் இல்லை. இந்த அரசிடமிருந்து நாங்கள் எதையும் பெறவில்லை” என்றார்

காங்கிரீட் வீடுகள் இல்லை. வைக்கோல் வீடுகள். தெருவிளக்குகள் இல்லை, டிவி கிடையாது. தூய்மை இந்தியா கழிப்பறையும் இல்லை. குழந்தைகளுக்கு காலணி இல்லை, சிலருக்குத்தான் உடைகளே இருக்கின்றன.

இவர்களில் பலர் தினக்கூலிகள், மாதத்தில் 10 நாட்களுக்கும் குறைவாகவே இவர்களுக்கு வேலை கிடைக்கும். பொதுவிநியோகம் என்பது மோசம். சிலருக்கு வறுமைக்கோட்டுக்குக் கீழ் உள்ளோருக்கான கார்டுகள் கிடைக்கும். ஆனால் இதில் பல உணவுப்பாதுகாப்புச் சட்டத்திற்குள் வராது. ’என்னிடம் எல்லா ஆவணங்களும் உள்ளன, ஆனால் ரேஷன் இதுவரை கிடைக்கவில்லை’ என்று கூறுகிறார் அந்த கிராமத்தைச் சேர்ந்த பெண்.

பெரிய அளவில் ஊழல் புகார்களை எழுப்பும் இவர்கள். இந்திரா ஆவாஸ் யோஜனாவில் அரசு இவர்களுக்கு இன்னும் கொடுக்க வேண்டிய தொகை பாக்கியுள்ளது. வரவில்லை காரணம் ஊழல் என்கின்றனர். இங்கு வேதனையுடன் கருத்து தெரிவிக்கும் அனைவரும் 2015-ல் ஐக்கிய ஜனதாதளத்துக்கு வாக்களித்தவர்களே. தாம்தஹா, ரூபாலி தொகுதிகள் ஜேடியு வசமே உள்ளன.

இவர்கள் தற்போது நிதிஷ் குமார் மீது நம்பிக்கை இழந்தனர். ராஷ்ட்ரிய ஜனதாதளம் என்ற பேச்சுக்கே இடமில்லை. ஏனெனில் 15 ஆண்டுகள் ஆர்ஜேடி ஆட்சியில் இன்னும் விளிம்புக்குத்தான் தள்ளப்பட்டோம் என்கின்றனர் இவர்கள்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in