Last Updated : 26 Oct, 2020 05:56 PM

 

Published : 26 Oct 2020 05:56 PM
Last Updated : 26 Oct 2020 05:56 PM

காங்கிரஸ் ஒரு மூழ்கும் கப்பல்; அடக்கம் செய்யும் நேரம் வந்துவிட்டது: குஜராத் முதல்வர் விஜய் ரூபானி பேச்சு

குஜராத் முதல்வர் விஜய் ரூபானி.

அகமதாபாத்

காங்கிரஸ் ஒரு மூழ்கும் கப்பலாக இருக்கிறது. இடைத்தேர்தல்களுக்குப் பிறகு அக்கட்சியிலிருந்து மேலும் பலர் விலகுவார்கள் என்று குஜராத் முதல்வர் விஜய் ரூபானி தெரிவித்துள்ளார்.

கடந்த ஜூன் மாதம் குஜராத்தில் 4 மாநிலங்களவை இடங்களுக்குத் தேர்தல் நடைபெற இருந்த நிலையில், அடுத்தடுத்து 8 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்து கட்சியிலிருந்து வெளியேறினர். இதனால், மாநிலங்களவைத் தேர்தலில் காங்கிரஸ் ஓரிடத்தில் மட்டுமே வெல்லும் நிலை ஏற்பட்டது.

இந்நிலையில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்த 8 தொகுதிகளுக்கான சட்டப்பேரவை இடைத்தேர்தல் வரும் நவம்பர் 3 ஆம் தேதி அன்று குஜராத்தில் நடைபெற உள்ளது. காங்கிரஸிலிருந்து விலகி பாஜகவில் சேர்ந்த எம்எல்ஏ ஜிதுபாய் சவுத்ரி இந்த முறை பாஜக சார்பாக தேர்தலைச் சந்திக்கிறார். இவரை ஆதரித்து முதல்வர் விஜய் ரூபானி பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார்.

வல்சாத் மாவட்டத்தின் கப்ராடா நகரில் பாஜக வேட்பாளர் ஜிதுபாய் சவுத்ரிக்கு ஆதரவாக ஒரு பிரச்சாரக் கூட்டத்தில் குஜராத் முதல்வர் விஜய் ரூபானி பேசியதாவது:

''காங்கிரஸ் ஒரு மூழ்கும் கப்பல். நவம்பர் 3 ஆம் தேதி நடைபெறும் இடைத்தேர்தலுக்குப் பின்னர் எதிர்க்கட்சியிடமிருந்து மாநிலத்தில் 8 இடங்களுக்கு மேலாக விலகல் ஏற்படும்.

8 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ததால் இந்த இடைத்தேர்தல் தற்போது அவசியமாகி உள்ளது. நாடு முழுவதும் காங்கிரஸ் சிதைந்து வருகிறது. அது ஒரு மூழ்கும் கப்பல். கடைசி ஆணியை அதன் சவப்பெட்டியில் வைத்து காங்கிரஸை அடக்கம் செய்ய வேண்டிய நேரம் வந்துவிட்டது.

காங்கிரஸ் தொண்டர்களுக்குத் தங்கள் கட்சியின் தலைமை மீது எந்த நம்பிக்கையும் இல்லை. ராகுல் காந்தியின் வழிநடத்தும் திறன் குறித்தும் கேள்விகள் எழுப்பப்படுகின்றன. கட்சித் தொண்டர்கள் வாரிசு அரசியல் தலைமையிலிருந்து விடுபட முயல்கின்றனர். கட்சித் தொண்டர்கள் இப்பொழுதுவரை யாரும் மகிழ்ச்சியாக இல்லை. இந்த இடைத்தேர்தலுக்குப் பின்னர் காங்கிரஸ் கட்சியிலிருந்து நிறையப் பேர் வெளியேறுவார்கள்.

2017 ஆம் ஆண்டில் ஹெவிவெயிட் ஷங்கர்சிங் வாகேலா மற்ற 13 எம்எல்ஏக்களுடன் காங்கிரஸ் கட்சியை விட்டு வெளியேறினார். அதைத் தொடர்ந்து அடுத்த ஆண்டு 6 பேர் வெளியேறினர். இப்போது 8 சட்டப்பேரவை உறுப்பினர்கள் வெளியேறி உள்ளனர்.

காங்கிரஸில் இருக்கும்போது மக்களின் பணிகளைச் செய்வது கடினம் என்பதை எம்எல்ஏக்கள் உணர்ந்தனர், ஏனென்றால் ஒரே ஒரு குடும்பத்தை மட்டுமே மகிழ்ச்சியாக வைத்திருப்பதாக கட்சி நம்புகிறது. ஜிதுபாய் (சவுத்ரி) தனது தொகுதியின் முன்னேற்றத்திற்காக பாஜகவில் இணைந்துள்ளார். கடந்த காலத்திலும் பல காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கட்சியை விட்டு வெளியேறினர்''.

இவ்வாறு விஜய் ரூபானி தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x