

வாழும் கலை அமைப்புடன் இணைந்து பழங்குடியினர் நலத்துறைக்கான இரண்டு சிறப்பு மையங்களை மத்திய பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் அர்ஜுன் முண்டா காணொலி காட்சி வாயிலாக நாளை தொடங்கி வைக்கிறார்.
வாழும் கலை அமைப்பின் நிறுவனர் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வார்.
முதல் கட்டமாக பஞ்சாயத்து ராஜ் நிறுவனங்களை வலுப்படுத்தும் நோக்கத்துடன் ஜார்க்கண்ட் மாநிலத்தின் ஐந்து மாவட்டங்களில் உள்ள 150 கிராமங்கள் மற்றும் 30 கிராமப் பஞ்சாயத்துகளில், தேர்ந்தெடுக்கப்பட்ட பஞ்சாயத்து ராஜ் நிறுவன பிரதிநிதிகளிடம் பழங்குடியினர் சட்டம் மற்றும் விதிகள் மற்றும் அவர்களுக்கான பல்வேறு நலத்திட்டங்களை எளிதாக பயன்படுத்துவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.
இரண்டாவதாக மகாராஷ்டிராவின் அவுரங்காபாத் மாநிலத்தில் உள்ள 10,000 பழங்குடி விவசாயிகளுக்கு நிலையான இயற்கை விவசாய வழிமுறைகள் குறித்து பயிற்சி அளிக்கப்படும். பழங்குடி விவசாயிகளை தற்சார்பு அடையச் செய்யும் வகையில் இந்த முயற்சி செயல்படுத்தப்படும்.