மகாராஷ்டிர துணை முதல்வர் அஜித் பவார் கரோனா தொற்றால் பாதிப்பு: மருத்துவமனையில் அனுமதி

மகாராஷ்டிர துணை முதல்வர் அஜித் பவார் : கோப்புப்படம்
மகாராஷ்டிர துணை முதல்வர் அஜித் பவார் : கோப்புப்படம்
Updated on
2 min read

மகாராஷ்டிர துணை முதல்வரும், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான அஜித் பவார் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். தற்போது முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டுள்ளார்.

நாட்டிலேயே மிகவும் மோசமாக கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டது மகாராஷ்டிர மாநிலம்தான். இன்னும் அந்த மாநிலத்தில் கரோனா பாதிப்பு முழுமையாகக் குறையவில்லை.

மகாராஷ்டிராவில் கரோனா பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியதிலிருந்து உத்தவ் தாக்கரே அமைச்சரவையில் பல அமைச்சர்கள் பாதிக்கப்பட்டு உடல்நலம் தேறியுள்ளனர். அவாத், அசோக் சவான், தனஞ்செய் முன்டே, வர்ஷா கெய்க்வாட், ஏக்நாத் ஷிண்டே, நிதின் ராவத், ஹசன் முஷ்ரிப், சுனில் கேதர், பாலசாஹேப் பாட்டீல், அஸ்லாம் ஷேக், அப்துல் சத்தார், சஞ்சய் பன்சோட், விஸ்வஜீத் காதம் ஆகியோர் கரோனாவில் பாதிக்கப்பட்டு உடல்நலம் பெற்றனர்.

கடந்த வாரத்தில் முன்னாள் முதல்வரும், பாஜகவின் எதிர்க்கட்சித் தலைவருமான தேவேந்திர பட்னாவிஸ் கரோனாவில் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளார். இந்நிலையில் மாநிலத் துணை முதல்வரும் நிதியமைச்சரும், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான அஜித் பவார் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக அஜித் பவார் ட்விட்டரில் பதிவிட்ட செய்தியில், “நான் கரோனா பரிசோதனை செய்து கொண்டதில் எனக்குத் தொற்று இருப்பது உறுதியானது. என்னுடைய உடல்நிலை சீராக இருக்கிறது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நான் ப்ரீச் கேண்டி மருத்துவமனையில் சேர்ந்துள்ளேன். என் உடல்நிலை குறித்து கட்சியின் தலைவர்களும், தொண்டர்களும் கவலைப்பட வேண்டாம். விரைவில் நலம் பெற்று மக்கள் பணிக்குத் திரும்புவேன். மருத்துவர்கள் சிறப்பாகக் கண்காணித்து வருகின்றனர்” எனத் தெரிவித்தார்.

கடந்த வியாழக்கிழமை அன்று அஜித் பவாருக்கு நடத்தப்பட்ட கரோனா பரிசோதனையில் அவருக்குக் கரோனா தொற்று இல்லை எனத் தெரியவந்தது. இருப்பினும் அவரின் அதிகாரபூர்வ இல்லத்தில் தன்னைத் தனிமைப்படுத்திக்கொண்டார்.

அஜித் பவாரின் குடும்பத்தினரும் கரோனா பரிசோதனை செய்துகொண்டதில் அவர்களுக்குக் கரோனா தொற்று இல்லை என்பது தெரியவந்தது.

அஜித் பவார் உடல்நிலை குறித்து மாநில சுகாதாரத்துறை அமைச்சர் ராஜேஷ் தோப் நிருபர்களிடம் இன்று கூறுகையில், “அஜித் பவார் இயல்பாக இருக்கிறார். ப்ரீச் கேண்டி மருத்துவமனையில் மருத்துவர்கள் ஆலோசனைப்படி முன்னெச்சரிக்கையாகச் சேர்ந்துள்ளார்.

வீட்டில் இருக்கும்போது தொடர்ந்து அவருக்கு செல்போன் அழைப்புகள் வந்ததால், ஓய்வில்லாமல் பவார் இருந்தார். இதனால் மருத்துவர்கள் அவரை மருத்துவமனைக்கு வருமாறு தெரிவித்தனர்.

ஓய்வுக்காக மட்டுமே மருத்துவமனைக்கு அஜித் பவார் வந்துள்ளார். மக்கள் அனைவரும் முகக்கவசம் அணிந்து வெளியே செல்ல வேண்டும், உடல்நலத்தையும், நோய் எதிர்ப்புச் சக்தியையும் உறுதி செய்ய வேண்டும்’’ எனத் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in