

எழுத்தாளர்களின் உரிமைகளைக் காக்க சாகித்ய அகாடமி தவறியது என்று குற்றம்சாட்டி ராஜஸ்தான் எழுத்தாளர் நந்த் பரத்வாஜ், தனது சாகித்ய அகாடமி விருதை திருப்பி அளித்தார்.
இது குறித்து நந்த் பரத்வாஜ் அகாடமிக்கு கடிதத்துடன் ரூ.50,000-த்துக்கான காசோலையையும் இணைத்து அனுப்பியுள்ளார்.
இவர் 2004-ம் ஆண்டு Samhi khulto marag என்ற தனது நூலுக்கு சாகித்ய அகாடமி விருது பெற்றார்.
“எழுத்தாளர் கல்புர்கி சுட்டுக் கொல்லப்பட்டது எனது உணர்வுகளை பெரிதும் காயப்படுத்தியுள்ளது, அகாடமியினால் எழுத்தாளர்களின் உரிமைகளைப் பாதுகாக்க முடியவில்லை, இந்த விவகாரத்தில் அகாடமி தனது வருத்தங்களைக் கூட தெரிவிக்கவில்லை.
இது, மத மற்றும் படைப்பாளர்கள் மீதான சகிப்புத் தன்மையற்ற போக்குகளுக்கு காட்டப்படும் எதிர்ப்பாகும். எழுத்தாளர்கள் மட்டுமல்ல சாமானிய மனிதர்களின் உணர்வும் அச்சுறுத்தப் படுகிறது. பேச்சுரிமை, கருத்துரிமைகள், அடிப்படைவாதம் மற்றும் மதவாதச் சக்திகளினால் சவாலுக்குள்ளாகியுள்ளன” என்று கூறினார் நந்த் பரத்வாஜ்.
இவருடன் சேர்த்து 29 எழுத்தாளர்கள் தங்கள் சாகித்ய அகாடமி விருதை திருப்பி அளித்துள்ளனர்.