Last Updated : 26 Oct, 2020 11:39 AM

 

Published : 26 Oct 2020 11:39 AM
Last Updated : 26 Oct 2020 11:39 AM

அனைத்து இந்தியர்களுக்கும் இலவச கோவிட்-19 தடுப்பூசி: மத்திய இணை அமைச்சர் சாரங்கி உறுதி

பாலசோரில் நடந்த கூட்டத்தில் மத்திய இணை அமைச்சர் பிரதாப் சந்திர சாரங்கி | படம் உதவி: ட்விட்டர்.

புவனேஸ்வர்

அனைத்து இந்தியர்களுக்கும் இலவச கோவிட்-19 தடுப்பூசி போடப்படும் என்று மத்திய கால்நடை பராமரிப்பு, பால், மீன்வளம் மற்றும் குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கான இணை அமைச்சர் பிரதாப் சந்திர சாரங்கி உறுதி அளித்தார்.

அக்டோபர் 20-ம் தேதி தேசத்திற்கு ஒரு தொலைக்காட்சி உரையில் பிரதமர் மோடி, ''இந்திய விஞ்ஞானிகள் மருத்துவப் பரிசோதனைகளின் பல்வேறு கட்டங்களில் உள்ள பல தடுப்பூசிகளை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அதற்கான முடிவு ஊக்கமளிப்பதாகத் தெரிகிறது'' என்று குறிப்பிட்டார்.

இதைத் தொடர்ந்து நாட்டில், கோவிட்-19 தடுப்பூசி குறித்த எதிர்பார்ப்பு அதிகரிக்கத் தொடங்கியது. பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான அறிக்கையில், பிஹார் மக்கள் எங்கள் கூட்டணிக்கு வாக்களித்தால் கோவிட்-19 தடுப்பூசி கிடைக்கும் என்று பாஜக வாக்குறுதி அளித்தது.

அரசியல் காரணங்களுக்காக தொற்றுநோயைப் பயன்படுத்துவதாகப் பாஜகவை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்தன.

இதற்குப் பதிலளித்துப் பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ''இது தேர்தல் அறிக்கையின் அறிவிப்பு என்பதால் இந்த வாக்குறுதி சரியானதுதான்'' என்று தெரிவித்திருந்தார்.

தமிழ்நாடு, மத்தியப் பிரதேசம், அசாம் மற்றும் புதுச்சேரி மாநில அரசுகள் ஏற்கெனவே தங்கள் மாநிலங்களில் இலவசமாக கோவிட் -19 தடுப்பூசிகள் வழங்கப்படும் என அறிவித்துள்ளன.

டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால், ''அனைத்து இந்தியர்களுக்கும் இலவசத் தடுப்பூசி பெற உரிமையுண்டு. எனவே நாட்டில் உள்ள அனைத்துக் குடிமக்களுக்கும் கோவிட்-19 தடுப்பூசி போடப்படவேண்டும்'' என்று வலியுறுத்தியுள்ளார்.

ஒடிசா உணவு வழங்கல் மற்றும் நுகர்வோர் நலத்துறை அமைச்சர் ஆர்.பி.ஸ்வைன் தனது ட்விட்டர் பக்கத்தில் “ஒடிசா மத்திய அமைச்சர்கள் இருவரிடமும் நான் கேள்விகளைக் கேட்கிறேன். ஏன் ஒடிசா மாநில மக்களுக்கு இலவசமாக கோவிட் தடுப்பூசி கிடைக்காது என்பது குறித்து தெளிவுபடுத்த வேண்டும். ஒடிசாவில் கரோனா தடுப்பூசி குறித்து பாஜகவின் நிலைப்பாட்டை மத்திய அமைச்சர்கள் தெளிவுபடுத்த வேண்டும்” என்று கேட்டிருந்தார்.

இந்நிலையில் மத்திய இணை அமைச்சர் சாரங்கி இதற்குப் பதில் அளித்துள்ளார்.

நவம்பர் 3-ம் தேதி பாலசோரில் நடைபெற உள்ள சட்டப்பேரவை இடைத்தேர்தலுக்கான பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றிய பின்னர் மத்திய இணை அமைச்சர் பிரதாப் சந்திர சாரங்கி செய்தியாளர்களிடம் கூறியதாவது:

''பிரதமர் நரேந்திர மோடி அனைத்து மக்களுக்கும் இலவசமாகத் தடுப்பூசிகள் வழங்கப்பட உள்ளதாக அறிவித்துள்ளார். ஒவ்வொரு நபருக்கும் தடுப்பூசி போட ரூ.500 செலவிடப்படும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட வேண்டுமென நாட்டில் உள்ள அனைத்துக் கட்சிகளும் கோரிக்கைகள் விடுத்துள்ளன. பாஜக அறிவித்தபடி, தேர்தல் நடைபெறும் பிஹாரில் மட்டுமல்லாமல், நிச்சயம் அனைத்து இந்தியர்களுக்கும் இலவச கோவிட்-19 தடுப்பூசி போடப்படும்''.

இவ்வாறு மத்திய இணை அமைச்சர் சாரங்கி தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x