Published : 26 Oct 2020 10:19 am

Updated : 26 Oct 2020 10:20 am

 

Published : 26 Oct 2020 10:19 AM
Last Updated : 26 Oct 2020 10:20 AM

ஆட்சிக் கவிழ்ப்பில் ஈடுபடுவதை விட்டு நாட்டின் பொருளாதாரத்தை முன்னேற்றுவதில் பாஜக கவனம் செலுத்தலாம்: உத்தவ் தாக்கரே தாக்கு

improve-economy-instead-of-toppling-govts-thackeray-to-bjp
மும்பையில் சிவசேனா சார்பில் நடந்த தசரா பேரணியில் பங்கேற்றுப் பேசிய முதல்வர் உத்தவ் தாக்கரே: படம் |ஏஎன்ஐ.

மும்பை

ஆட்சிக் கவிழ்ப்பில் ஈடுபடுவதிலேயே பாஜக தொடர்ந்து ஆர்வம் காட்டிவந்தால் நாட்டில் அராஜகம்தான் வளரும். அதற்குப் பதிலாக நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தலாம் என்று மகாராஷ்டிர மாநில முதல்வரும், சிவசேனா தலைவருமான உத்தவ் தாக்கரே காட்டமாகப் பேசியுள்ளார்.

சிவசேனா கட்சியின் சார்பில் தசரா பேரணி மும்பை தாதர் பகுதியில் சிறிய அரங்கில் நேற்று நடந்தது. கரோனா வைரஸ் காரணமாக மிகப்பெரிய அளவில் சிவாஜி பார்க்கில் திறந்த வெளியில் நடத்தப்படாமல் சிறிய அளவிலேயே நடத்தப்பட்டது.


இந்த தசரா பேரணியில் சிவசேனா தலைவரும், மாநில முதல்வருமான உத்தவ் தாக்கரே பங்கேற்றார்.

அப்போது அவர் பேசியதாவது:

''என்னுடைய தலைமையில் செயல்பட்டுவரும் 11 மாதங்கள் நிறைவடைந்த ஆட்சியைக் கவிழ்ப்பதற்கு பல முறை முயன்றார்கள். என் ஆட்சியைக் கவிழ்க்க பாஜகவுக்குத் துணிச்சல் இருக்கிறதா என்று நான் கேட்கிறேன். முதலில் மத்திய அரசு தன்னுடைய அரசைக் காப்பாற்றிக் கொள்ளட்டும்.

முன்பெல்லாம், மாற்றுக் காரணி ஏதும் இல்லை (மோடிக்கு மாற்று) என்ற சூழல் இருந்தது. ஆனால், இப்போது உங்களைத் தவிர்த்து வேறு யார் வேண்டுமாலும் செய்வார்கள் என்று மக்கள் சிந்திக்கத் தொடங்கிவிட்டார்கள் (பிரதமர் மோடியின் பெயரைக் குறிப்பிடாமல்).

நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்குப் பதிலாக, அரசுகளைக் கவிழ்ப்பதிலேயே கவனம் செலுத்துகிறது பாஜக. இது அராஜகத்துக்குத்தான் கொண்டு செல்லும். ஆனால், சிவசேனாவைப் பொறுத்தவரை பதவிப் பேராசை கிடையாது.

நாட்டில் கரோனா வைரஸ் பரவல் இருக்கும் நிலையில், எப்படி உங்களால் அரசியல் செய்ய முடிகிறது? ஆட்சியைக் கவிழ்க்க முடிகிறது. மகாராஷ்டிர அரசையும், மும்பை போலீஸாரையும் அவமானப்படுத்துகிறார்கள்.

நாக்பூரில் பேசிய ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் இந்துத்துவா என்பது பூஜைகளைக் கடைப்பிடிப்பதோடு முடிந்துவிடுகிறது என்று வேதனைப்பட்டுள்ளார். நான் கேட்கிறேன். என் தந்தை பால் தாக்கரேவின் இந்துத்துவாவில் இருந்து வேறுபட்டது என்னுடைய இந்துத்துவா. உங்களின் இந்துத்துவா என்பது மணி அடிப்பதும், பாத்திரங்களில் ஒலி எழுப்புவதும்தான். எங்களின் இந்துத்துவா அப்படி அல்ல.

கறுப்பு தொப்பி வைத்திருப்பவர்களுக்கு மூளை இருக்கிறதா. இந்துத்துவா பற்றாளர் என்று கோயிலைத் திறக்கச் சொல்வதில் மட்டும் காட்டிக்கொள்கிறார்கள். (ஆளுநர் கோஷ்யாரி) மகாராஷ்டிராவில் கோயில்களைப் பூட்டி வைத்திருப்பதில் எனக்கும் மகிழ்ச்சியில்லை. கட்டுப்பாடுகளைப் படிப்படியாகத்தான் தளர்த்த முடியும்.

பிஹார் முதல்வர் தற்போது பாஜகவுடன் கூட்டணி வைத்து தேர்தலைச் சந்திக்கிறார். ஆனால், ஒருநேரத்தில் "சங்-முக்த் பாரத்" என்று கோஷமிட்டு, மதச்சார்பின்மையை வெளிப்படுத்தியவர்தான் நிதிஷ் குமார். நான் கேட்கிறேன். இந்துத்துவாவிற்கு நிதிஷ் குமார் என்ன செய்துவிட்டார் அல்லது நிதிஷ் குமாருடன் சேர்ந்துவிட்டதால் பாஜக இப்போது மதச்சார்பற்ற கட்சியாக மாறிவிட்டதா?

சொந்த மாநிலத்தைவிட்டு மும்பைக்குப் பிழைக்க, நடிக்க வந்த சிலர், மும்பைக்கே துரோகம் செய்கிறார்கள். மும்பையை ஆக்கிரமிப்பு காஷ்மீர் என்று சாடுகிறார்கள் (நடிகை கங்கணா ரணாவத்).

பிஹார் மண்ணின் மைந்தனுக்காக (நடிகர் சுஷாந்த் கொலை) அழும் சிலர், மகாராஷ்டிர மண்ணின் மைந்தனின் (ஆதித்யா தாக்கரே) குணத்தை, ஒழுக்கத்தைக் கொலை செய்யும் முயற்சியில் இருக்கிறார்கள்.

தற்போதுள்ள ஜிஎஸ்டி வரிமுறையை மறு ஆய்வு செய்யும் காலம் வரும். மாநிலங்கள் இந்த வரிமுறையால் பயன் அடையாத சூழலில் தேவைப்பட்டால் மாற்றப்படும்''.

இவ்வாறு உத்தவ் தாக்கரே தெரிவித்தார்.


தவறவிடாதீர்!

Improve economyNstead of toppling govts:Thackeray to BJPMaharashtra Chief Minister Uddhav ThackerayBJPImproving the nation’s economy.பாஜகஉத்தவ் தாக்கரேசிவேசனாதசராபேரணிஆட்சிக் கவிழ்ப்புபொருளாதாரத்தை முன்னேற்றுங்கள்

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x