

பெங்களூருவில் நேற்று முன் தினம் இரவு விடிய விடிய கொட்டிய கனமழையால் பல்வேறு இடங்களில் வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது. இதில் பாதிக்கப்பட்டோரின் குடும்பத்துக்கு தலா ரூ. 25 ஆயிரம் வழங்க முதல்வர் எடியூரப்பா உத்தரவிட்டுள்ளார்.
பெங்களூருவில் கடந்த ஒரு வாரமாக இரவில் கனமழை பெய்து வருகிறது. இதனால் சாலைகளில் மழை நீர் வெள்ளம் போல் தேங்கியுள்ளதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர். இந்நிலையில் நேறு முன் தினம் இரவு 7 மணிக்கு தொடங்கிய மழை காலை 8 மணிவரை விடிய விடிய கொட்டி தீர்த்தது. பெங்களூரு தெற்கு பகுதியில் 100 மில்லி மீட்டர் அளவுக்கு மழை பெய்ததால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
ஒசகெரேஹள்ளி, பீன்யா, பனசங்கரி உள்ளிட்ட பகுதிகளில் தாழ்வான இடங்களில் மழை வெள்ளம் புகுந்தது. இதனால் அங்கிருந்த 500க்கும் மேற்பட்ட வீடுகளில் வெள்ளம் புகுந்ததால் மக்கள் கடும் சிரமத்துக்கு ஆளாகினர்.வீட்டில் இருந்த பீரோ,கட்டில், சோபா, குளிர்சாதன பெட்டி உள்ளிட்ட வீட்டு உபயோகப் பொருட்கள் சேதமடைந்தன. வீட்டுக்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்த கார், ஆட்டோ, வேன், இரு சக்கர வாகனங்களும் நீரில் மூழ்கின. இரவில் தூக்கத்தை இழந்த மக்கள் வீட்டில் தேங்கிய மழை நீரை மோட்டார் மூலம் வெளியேற்றும் பணியில் ஈடுபட்டனர்.
இதே போல மெஜஸ்டிக், மைசூரு சாலை, ஓசூர் சாலை உள்ளிட்ட பகுதிகளில் மழை நீர் வெள்ளம் போல தேங்கியதால் பேருந்துகளை இயக்குவதில் சிக்கல் ஏற்பட்டது. பல்வேறு சாலைகளில் உள்ள சுரங்க பாதைகளில் மழைநீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்துக்கு ஆளாகினர். தொடர் மழையால் சாலைகளில் அதிகளவில் குழிகள் ஏற்பட்டதால் கடும் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.
இதுகுறித்து முதல்வர் எடியூரப்பா நேற்று பெங்களூரு பொறுப்பு அமைச்சர் ஆர். அசோக், பெங்களூரு மாநகராட்சி அதிகாரிகள் ஆகியோருடன் ஆலோசனை நடத்தினார். அப்போது எடியூரப்பா, 'பெங்களூருவில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உணவு, உடை, உறைவிடம் உடனடியாக வழங்க வேண்டும். வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்து பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ரூ. 25 ஆயிரம் வழங்கப்படும். மழைக்கால மீட்பு பணியில் தீயணைப்பு படையினருடன், தேசிய பேரிடர் மீட்பு படையினரும் ஈடுபடுத்தப்படுவார்கள்''என தெரிவித்தார்.