Last Updated : 25 Oct, 2020 01:58 PM

 

Published : 25 Oct 2020 01:58 PM
Last Updated : 25 Oct 2020 01:58 PM

இந்திய குடியரசு கட்சியின் மூத்த தலைவர் இரா.துரைசாமி காலமானார்: பெங்களூருவில் உடல் நல்லடக்கம்

இந்திய குடியரசு கட்சியின் மூத்த தலைவரும் அம்பேத்கரிய இயக்க முன்னோடியுமான இரா.துரைசாமி (86) நேற்று முன் தினம் இரவு உடல்நிலை கோளாறு காரணமாக காலமானார். அவரது உடல் பெங்களூருவில் நேற்று மாலை நல்லடக்கம் செய்யப்பட்டது.

கர்நாடக மாநிலம் கோலார் தங்கவயலை சேர்ந்த இரா.துரைசாமி (86) பண்டிதர் அயோத்திதாசரின் வழிவந்த பூர்வ பவுத்த குடும்பத்தை சேர்ந்தவர். தென்னிந்திய பவுத்த சங்கப்பள்ளியில் பண்டிதமணி ஜி.அப்பாதுரையாரிடம் கல்வி கற்றார். மாணவ பருவத்திலே பாபாசாகேப் அம்பேத்கரின் கருத்துகளால் ஈர்க்கப்பட்டு, அவரது 'செட்யூல்ட் காஸ்ட் ஃபெடரேஷன்' அமைப்பில் இணைந்தார்.

பின்னர் பெங்களூருவுக்கு இடம்பெயர்ந்த இரா.துரைசாமி இந்திய தொலைப்பேசி தொழிற்சாலையில் பணியாற்றினார். அப்போது இந்திய குடியரசு கட்சியில் சேர்ந்த இவர் பெங்களூரு, கோலார் தங்கவயல், வேலூர் உள்ளிட்ட பகுதிகளில் அம்பேத்கரிய கருத்தியலை பரப்பும் பணியில் ஈடுபட்டார். அரசியல் செயல்பாட்டின் காரணமாக அம்பேத்கர், என்.சிவராஜ், மீனாம்பாள் உள்ளிட்டோரை நேரில் சந்திக்கும் வாய்ப்பை பெற்றார்.

பணியில் இருந்து ஓய்வு பெற்ற பின் இந்திய குடியரசு கட்சியின் முழு நேர உறுப்பினரான இரா.துரைசாமி ஒடுக்கப்பட்ட மக்கள் பிரச்சினைகளுக்கான போராட்டங்களில் தொடர்ச்சியான முன்னெடுத்தார். தென்னிய பவுத்த சங்க பெங்களூரு கிளையின் செயலாளராக இருந்த போது பல்வேறு பண்பாட்டு நிகழ்வுகளையும் ஒருங்கிணைத்தார். இந்திய குடியரசு கட்சியில் பல்வேறு பொறுப்புகளை வகித்த பாலகிருஷ்ணன் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக அக்கட்சியின் க‌ர்நாடக மாநில துணைத் தலைவராக‌ இருந்தார்.

அக்கட்சியின் முன்னோடிகளான ஆர்.எஸ்.கவாய், பள்ளிக்கொண்டா தளபதி கிருஷ்ணசாமி, பசவலிங்கப்பா,ஜே.சி.ஆதிமூலம்,பி.எம்.சாமிதுரை, எம்.ஏ.அமலோற்பவம், சி.எம்.ஆறுமுகம் உள்ளிட்ட ஆளுமைகளுடன் இணைந்து பணியாற்றியுள்ளார். கடந்த ஓராண்டாக உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்த இரா.துரைசாமி நேற்று முன் தினம் இரவு காலமானார்.

பெங்களூருவில் உள்ள இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த இரா.துரைசாமியின் உடலுக்கு இந்திய குடியரசு கட்சியின் கர்நாடக மாநில தலைவர் கோவிந்தராஜ், துணை பொதுச்செயலாளர் தனபால், உலக தமிழ் கழக தலைவர் கி.சி. தென்னவன் உள்ளிட்டோர் நீலக்கொடி போர்த்தி அஞ்சலி செலுத்தினர். இதையடுத்து மாலை ஒசூர் சாலையில் உள்ள கல்லறையில் பவுத்த முறைப்படி பஞ்சசீலம் வாசிக்கப்பட்டு, அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

மூத்த அம்பேத்கரிய செயல்பாட்டாளரான இரா.துரைசாமியின் ம‌றைவுக்கு இந்திய குடியரசு கட்சியின் தேசிய தலைவர் எஸ்.ராஜேந்திரன், தேசிய பொதுசெயலாளர் ராஜேந்திர கவாய், தென்னிந்திய பவுத்த சங்கத்தின் ஆலோசகர் துரை ராஜேந்திரன் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x