Last Updated : 25 Oct, 2020 11:27 AM

 

Published : 25 Oct 2020 11:27 AM
Last Updated : 25 Oct 2020 11:27 AM

பிஹாரில் மெகா கூட்டணி ஆட்சி அமைந்தால் 10 லட்சம் பேருக்கு பக்கோடா அல்ல, அரசு பணி அளிப்பதாக தேஜஸ்வீ உறுதி

புதுடெல்லி

பிஹாரில் மெகா கூட்டணி அமைந்தால் பக்கோடா அல்ல, 10 லட்சம் பேருக்கு அரசு பணி அளிப்பதாக ராஷ்டிரிய ஜனதா தளம்(ஆர்ஜேடி) தலைவர் தேஜஸ்வீ பிரசாத் யாதவ் உறுதி அளித்துள்ளார்.

இது குறித்து நேற்று பிஹாரின் பிரச்சார மேடையில் மெகா கூட்டணியின் முதல் அமைச்சர் வேட்பாளரான தேஜஸ்வீ பேசும்போது, ‘எங்கள் தேர்தல் அறிக்கையில் கூறியதை நிறைவேற்றிக் காட்டுவோம் என உறுதி அளிக்கிறோம்.

10 லட்சம் பேருக்கு உடனடியாக அரசு பணி, விவசாயிகளின் கடன் தள்ளுபடி, ஸ்மார்ட்டாக கிராமப்புறங்களை மாற்றி மருத்துவ ரீதியாக வளர்ச்சி பெறச் செய்வோம்.

மற்ற கட்சிகளை போல் ஒரு கோடி பேருக்கு அரசு பணி அளிப்பதாக எங்களால் கூற முடியும். ஆனால், தேர்தல் வாக்குறுதியான அதை நிறைவேற்ற முடியாது என்பதால் 10 லட்சம் என அறிவித்துள்ளோம்.’ எனத் தெரிவித்தார்.

பகோடா சுடுவதும் ஒரு வேலை தான் எனும் வகையில் கடந்த 2018 இல் பிரதமர் நரேந்திர மோடி கூறியதையும் தேஜஸ்வீ தனது பிரச்சாரத்தில் நினைவுபடுத்தினார்.

இது குறித்து தேஜஸ்வீ கூறும்போது, ‘அரசு பணி மற்றும் வேலைவாய்ப்பு இரண்டிற்கும் இடையே வித்தியாசம் உள்ளது. பகோடா சுடுவதும், சாலை கால்வாய்களை சுத்தம் செய்வதும் வேலைவாய்ப்பு. நான் சொல்வது அரசு அலுவலகங்களின் பணி.’ என விளக்கம் அளித்தார்.

ஆர்ஜேடியின் தேர்தல் அறிக்கையில் 10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு என அறிவிக்கப்பட்ட போது, முதல்வர் நிதிஷ்குமார் கேள்வி எழுப்பி இருந்தார். இதன் மீது தேஜஸ்வீ கூறிய கருத்து பிஹாரின் இளைஞர்கள் இடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதன் மீதான கருத்தாக தேஜஸ்வீ கூறுகையில், ’10 லட்சம் பேருக்கு அரசு பணி என நாம் அறிவிப்பு வெளியிடுகையில் அதற்கான பணம் எங்கிருந்து வரும்? என முதல்வர் நிதிஷ் கேள்வி எழுப்பினார்.

அது உண்மையானால், அதன் கூட்டணியான பாஜகவும் அரசு பணி அளிப்பதாக உறுதி அளிப்பது எப்படி? இவர்கள் அனைவரும் சேர்ந்து பொதுமக்களை முட்டாள்களாக்க முயற்சிக்கின்றனர்.’ எனத் தெரிவித்தார்.

பிஹாரில் அக்டோபர் 28, நவம்பர் 3 மற்றும் 7 தேதிகளில் மூன்று கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. இதன் முக்கிய போட்டியாளர்களில் ஒருவரான ஆர்ஜேடி மெகா கூட்டணிக்கு தலைமை வகிக்கிறது.

இதன் உறுப்பினர்களாகக் காங்கிரஸ், இடதுசாரி கட்சிகள் இடம் பெற்றுள்ளன. இங்கு மொத்தம் உள்ள 243 தொகுதிகளுக்கான முடிவுகள் நவம்பர் 10 இல் வெளியாகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x